| ‘‘ஆமாம்! காற்றாடப் போய்விட்டு வரலாம் என்று ‘இவரு’ கூப்பிட்டார்...போனோம்...’’ - என்று வேண்டுமென்றே அந்த ‘இவரில்’ ஓர் அழுத்தம் கொடுத்து மறுமொழி கூறினாள் மாதவி. முத்துக்குமரனோ அவரெதிரில் நிற்கவே விரும்பாதவனைப்போல் விறுவிறுவென்று முன்னால் நடந்து ஹாலுக்குள் போய்விட்டான். மாதவியைப் போகவிடாமல் நிற்கச் செய்து பேச்சுக் கொடுக்க விரும்பினார் அவர். ‘‘பார்க்குக்குப் போறதாகச் சொல்லியிருந்தீங்கன்னா நாங்ககூட வந்திருப்போமே?’’ ‘‘நீங்களும் கோபால் சாரும் ‘காக்டெயில்லே’ தீவிரமா இருந்தீங்க...வருவீங்களோ மாட்டீங்களோன்னு தான் நாங்களே புறப்பட்டோம்...’’ ‘‘சொல்லியிருந்தா துணைக்காவது யாரையும் அனுப்பியிருப்பேனே?’’ ‘‘துணைக்கு எதுக்கு; அதுதான் வசனகர்த்தா சார் கூட வந்திருந்தாரே?’’ ‘‘.........’’ ‘‘உங்களுக்கு ஏதாவது நல்ல ‘ஸெண்ட்ஸ்’ வேணும்னா தரேன். பிரமாதமான ‘ஸெண்ட்ஸ்’ எல்லாம் எங்கிட்ட இருக்கு!’’ - என்று பேச்சை வாசனையோடு வேறு திசைக்குத் திருப்பினார் அப்துல்லா. மாதவி பதில் ஒன்றும் சொல்லாமல் அவருடைய மனநிலையை அறிந்து சிரித்து மழுப்பினாள். ‘‘சானல் நம்பர் ஃவைவ், பாட்ரா, ஈவினிங் இன்பாரிஸ் எது வேணும்னாலும் இருக்கு. தரேன், உங்களுக்கு வாசனை ரொம்பப் பிடிக்கும்னு தெரிகிறது. கோபால் சார் கூடச் சொல்லியிருக்கார்.’’ ‘‘பரவாயில்லே? இப்ப எனக்குத் தேவை இல்லை. |