| 	      மேடையில் நடந்ததில் மனம் குமுறியிருந்த மாதவி முத்துக்குமரனைக்     கிரீன் ரூமுக்கே வரச் சொல்லித் தனக்கு மிகவும் வேண்டிய துணை நடிகை     ஒருத்தியிடம் சொல்லியனுப்பியிருந்தாள். அவளுக்கும் மலையாளத்துப் பக்கம்     தான்.                ‘‘மாதவி விளிச்சு’’ என்று மேடையருகே கீழே நின்று கொண்டிருந்த     முத்துக்குமரன் காதருகே வந்து கூறினாள் அந்தத் துணை நடிகை. அதைக்     காதில் வாங்கிக் கொள்ளாதவன் போலிருந்த முத்துக்குமரனிடம் மீண்டும்     அருகில் வந்து ‘‘ஞான் வரட்டே?’’ என்று கேட்டாள் அந்தத் துணை நடிகை.     முத்துக்குமரன் அவள் போகலாம் என்பதற்கு அடையாளமாகத் தலையை     ஆட்டினான். அவள் போய்விட்டாள். சிறிதுநேர இடைவெளிக்குப்பின் அவனும்     கிரீன் ரூமுக்குச் சென்றான். மாதவி அவனருகே வந்து குமுறினாள்.                ‘‘இங்கு நடந்த இந்த அக்கிரமத்தை என்னால் பொறுத்துக் கொள்ள     முடியவில்லை. நாம் விருந்துக்குப் போக வேண்டாம்.’’                ‘‘தன்மானம் வேறு! அற்பத்தனம் வேறு; அவர்களைப் போல் நாமும்     அற்பத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது. மாதவி! இந்த மாதிரி விஷயங்களில்     நான் ரொம்ப ரோஷக்காரன். அசல் கலைஞன் ஒவ்வொருவனுமே இப்படி     ரோஷக்காரன்தான். ஆனால் அது ரோஷமாக இருக்க வேண்டுமே ஒழிய     மிகவும் அற்பத்தனமான குரோதமாக இருக்கக் கூடாது. புது நாட்டில் புது     ஊரில் நாம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.’’                அது சரி! ஆனால் மற்றவர்கள் நம்மிடம் அப்படிப் பெருந்தன்மையோடு     நடந்துகொள்ளவில்லையே? அற்பத்தனமாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்.’’  	 |