பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி223

     ‘‘பரவாயில்லை! இன்னும் நாம் பெருந்தன்மையாக நடந்து
கொள்வதற்குத்தான் அவசியமிருக்கிறது.’’

     - இதற்குமேல் மாதவி அவனோடு வாதிடவில்லை. அன்றிரவு அவர்கள்
விருந்துக்குப் போனார்கள்.

     விருந்து முற்றிலும் மேனாட்டு முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்விடேஷன்கள் ரொம்பவும் காஸ்மாபாலிடனாகக் கொடுக்கப்பட்டிருந்தன.
சில மலாய்க்காரர்கள், சீனர்கள், வெள்ளைக்காரர்கள், அமெரிக்கர்கள்கூடத்
தத்தம் குடும்பத்தோடு விருந்துக்கு வந்திருந்தார்கள்.

     - விருந்து முடிந்ததும் வேறொரு ஹாலில் வந்திருந்தவர்கள் ஆணும்
பெண்ணுமாகக் கைகோர்த்து டான்ஸ் ஆடினார்கள். முத்துக்குமரனும் மாதவியும்
ஓர் ஓரமாகப் போட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருந்தார்கள். டான்ஸில் கலந்துகொள்ளவில்லை. கோபால் கூட ஒரு
சீன யுவதியோடு - டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில்
அப்துல்லா வந்து தன்னோடு டான்ஸ் ஆட வருமாறு மாதவியைக் கூப்பிட்டார்.

     ‘‘எக்ஸ்க்யூஸ் மீ சார்; நான் இவரோடு பேசிக் கொண்டிருக்கிறேன்’‘ -
என்று மிகவும் மரியாதையாகப் பதில் கூறிப் பார்த்தாள் மாதவி. அப்துல்லா
விடவில்லை. இந்த நைப்பாசையைத் தீர்த்துக்கொள்ளவே அந்த விருந்துக்கு
அவர் ஏற்பாடு செய்திருப்பார் போலிருந்தது அவளோடு அருகே அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கும் முத்துக்குமரனை ஓர் ஆளாகவே பொருட்படுத்தாதது
போலத் திரும்பத் திரும்ப அப்துல்லா அவளிடமே வந்து கொஞ்சத்
தொடங்கிப் பதிலளித்தார். முத்துக்குமரன் அநாவசியமாகத் தான் குறுக்கிட்டு
அவருக்குப் பதில் சொல்ல வேண்டாம் என்று ஆனமட்டும் பொறுத்துப்
பார்த்தான்.