பக்கம் எண் :

224சமுதாய வீதி

ஒரு நிலைக்குமேல் அப்துல்லா வெறிகொண்டு தம்மைக் கட்டுப்படுத்திக்
கொள்ள முடியாமல் மாதவியை மெல்ல கையைப் பிடித்து இழுக்கவே
ஆரம்பித்து விட்டார்.

     ‘‘வரமாட்டேன்கிற பொம்பிளையைக் கையைப் பிடிச்சு இழுக்கறதுதான்
உங்க ஊர் நாகரிகமோ? - என்று அப்போதுதான் முத்துக்குமரன் முதன்
முதலாக வாய்திறந்தான். அப்துல்லா கடுங்கோபத்தோடு அவனைப் பார்த்து
முறைத்தார்.

     ‘ஷட் அப்’ ஐயாம் நாட் டாக்கிங் வித் யூ - ’’ அப்துல்லா
முத்துக்குமரனை இப்படி இரைந்த பின் மாதவி அவரை இன்னும் அதிமாக
வெறுக்கத் தொடங்கினாள். அப்புறம் கோபால் அவளைத் தேடிவந்து
அப்துல்லாவுக்காக வக்காலத்து வாங்கிப் பேசினான்.

     ‘‘இவ்வளவு செலவழிச்சுக் கூப்பிட்டிருக்காரு. நாம் இந்த நாட்டைவிட்டு
ஊர் திரும்பறதுக்குள்ள நமக்கு இன்னும் என்னென்னவோ செய்யணும்னு
இருக்காரு. அவர் பிரியத்தை ஏன் கெடுத்துக்கறே?’’

     ‘‘நான் முடியாது -’’ என்று கடுமையாக அவள் மறுத்ததற்குக் காரணமே
அருகில் முத்துக்குமரன் நிற்பது தான் என்பதாக, கோபால் புரிந்து
கொண்டான். முத்துக்குமரன் அருகில் இல்லாவிட்டால் அவள் தன்னிடம்
இவ்வளவு கடுமையாகப் பதில் சொல்லியிருக்க மாட்டாள் என்பதையும்
கோபாலால் அநுமானிக்க முடிந்தது. எனவே அடிபட்ட புலிபோல் சீறினான்
கோபால்.

     ‘‘நீ பயப்படறதைப் பார்த்தா வாத்தியாரை அம்மி மிதிச்சு அருந்ததி
பார்த்துக் கலியாணங்கட்டிக்கிட்ட மாதிரியில்ல இருக்கு? அப்படிக்
கலியாணங்கட்டிக்கிட்டவங்க கூட இந்தக் காலத்தில் புருசனுக்கு இப்பிடி
இவ்வளவு நடுங்கறதில்லே.’’