பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி235

அப்போது அவர்கள் இருவருமே பரஸ்பரம் தங்களுக்குள் பிரதிக்ஞை செய்து
கொண்டார்கள். அன்று மாலையிலேயே ஈப்போவுக்குப் புறப்படும்போது ஒரு
சோதனை வந்து சேர்ந்தது.

     நாடகங்களின் மொத்தக் காண்ட்ராக்ட்காரரான அப்துல்லா தன்னுடன்,
கோபாலுக்கும் மாதவிக்கும் மட்டும் விமானத்தில் ஈப்போ செல்ல ஏற்பாடு
செய்து கொண்டு மற்றவர்கள் அனைவருமே - காரில் பயணம் செய்யட்டும்
என்று திட்டம் வகுத்திருந்தார். அதன்படி முத்துக்குமரனும் காரிலே
போகிறவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.

     புறப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் இந்த ஏற்பாடு
மாதவிக்குத் தெரிந்தது. அவள் உடனே கோபாலிடம் சென்று தைரியமாக
மறுத்துவிட்டாள்.

     ‘‘நானும் காரிலேயே வரேன். நீங்களும் அப்துல்லாவும் மட்டும் ப்ளேன்ல
வாங்க...’’

     ‘‘அது முடியாது! ஈப்போக்காரர்கள் ஏர் - போர்ட்ல வரவேற்க
வந்திருப்பாங்க...’’

     ‘‘வந்திருக்கட்டுமே, அதுனாலே என்ன? நீங்கதான் போறீங்களே...’’

     ‘‘அது எப்படியிருந்தாலும் நீயும் ப்ளேன்லதான் வந்தாகணும்.’’

     ‘‘நான் கார்லதான் வருவேன்...’’

     ‘‘அதென்ன? அப்பிடி ஒரு பிடிவாதமா?’’

     ‘‘பிடிவாதம்தான்.’’

     ‘‘வாத்தியாருக்குப் பிளேன் டிக்கட் வாங்கலேங்கிறதுக்காகத்தான் நீ இப்ப
வல்வழக்காடறே?’’

     ‘‘அப்படித்தான் வச்சுக்குங்களேன். நான் அவரோட தான் காரிலே
ஈப்போ வரப்போறேன்...’’