‘‘நீ விரும்பினால் வரலாம்’’ - என்று மாதவியிடம் மட்டும் தெரிவித்தான் கோபால். ‘‘நான் வரவில்லை’’ - என்று சுருக்கமாகப் பேச்சை முடித்து அவனை அனுப்ப முயன்றாள் மாதவி. ஆனால் கோபால் அதோடு விடாமல் மேலும் பேச்சுக் கொடுத்தான். ‘‘உதயரேகாவை அனுப்பிச்சும்...அப்துல்லா உன்னையே நெனைச்சு உருகிப் போயிட்டிருக்காரு...’’ ‘‘அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் கேமரான் ஹைலண்ட்ஸு க்கு வரலையின்னு சொன்னப் புறமும் நீங்க மேலே மேலே பேசிக்கிட்டிருந்தா அப்புறம்நான் பதில் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.’’ ‘‘அதுக்கில்லே; அப்துல்லா கோடீஸ்வரன். மனசு வச்சுட்டான்னாக் கோடிகோடியாப் பணத்தைக் கால்லே கொண்டாந்து கொட்டுவான்.’’ ‘‘எங்கே கொட்டணுமோ கொட்டட்டுமே?’’ ‘‘நீ வீணாக ரொம்ப மாறிப்போயிட்டே.’’ ‘‘ஆமாம் மாறித்தான் போயிட்டேன். அதை நீங்க புரிஞ்சிக்கிட்டிருந்தாச் சரிதான். ‘‘வாத்தியார் என்னமோ மாயமாகச் சொக்குப் பொடி போட்டு உன்னை மயக்கிப்புட்டான்...’’ தன் அறையைத் தேடி வந்து தனிமையில் கோபால் நீண்ட நேரம் பேசுவதை அவள் விரும்பவில்லை. அவன் வாயிலிருந்து வீசிய நாற்றத்தில் அப்போது அவன் குடித்துவிட்டு வேறு வந்திருக்கிறான் என்று தெரிந்தது. ஆகவே நீண்ட பேச்சைத் தவிர்க்க விரும்பினாள் அவள். அவனோ என்ன சொல்லியும் போகிற வழியாயில்லை. பேசிக் கொண்டே நின்றவன் திடீரென்று ஒரு பயங்கர மிருகத்தின் வெறியோடு தாவி அவளைத் தழுவ முயன்றான். அதை முற்றிலும் எதிர்பாராத மாதவி தன் கைகளின் முழுப் பலத்தையும் பிரயோகித்து அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு |