முடிவின் போதும் கைதட்டல் கட்டிடமே அதிரும்படி ஒலித்தது. அன்றைய நாடகம் பிரமாதமான வெற்றியாக அமைந்தது. சக நடிகர்களும் அப்துல்லாவும் முத்துக்குமரனை வாய் ஓயாமல் பாராட்டினார்கள். ‘‘இதிலே பாராட்ட என்ன இருக்கு? என் கடமையை நான் செய்தேன். பணம் செலவழித்து அழைத்திருக்கிறீர்கள். கை நஷ்டப்படுமோ என்று உங்களுக்குப் பயம் வருகிறது. உங்கள் பயத்தைப் போக்கவும், என் நண்பனைக் காப்பாற்றவும் நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன்’’ என்று சுபாவமாக அப்துல்லாவுக்கு மறுமொழி கூறினான் அவன். மறுநாள் காலைத் தினசரிகளில் கோபால் குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிந்து படுத்த படுக்கையாயிருக்கும் செய்தியும் முந்திய தினம் இரவு நடந்த நாடகத்தில் கோபால் நடிக்க வேண்டிய பாகத்தை அந்த நாடகத்தின் ஆசிரியராகிய முத்துக்குமரன் என்பவரே ஏற்று நடித்தார் என்ற செய்தியும் வெளியாகி விட்டன. மறுநாள் காலை முத்துக்குமரனும், மாதவியும் கோபாலைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். ‘‘சமயத்திலே கைகொடுத்து என் மானத்தைக் காப்பாத்தினத்துக்கு நன்றி வாத்தியாரே’’ - என்ற கை கூப்பினான் கோபால். ‘‘நான் உன் மானத்தைக் காப்பாத்தணும்னுதானே நீ வந்த இடத்திலே வெளிநாட்டுச் சரக்காச்சேன்னு காணாததைக் கண்டதுபோல மட்டில்லாமக் குடிச்சு மானத்தைக் கப்பலேத்திக்கிட்டிருக்கே. நல்ல வேளை பேப்பர்காரன்லாம் ‘குளியலறையிலே வழுக்கி விழுந்து’ன்னு மட்டும் தான் போட்டிருக்கான். எதினாலே வழுக்கி விழுந்தான்னு சேர்த்துப் போட்டிருந்தானோ எல்லாரும் சிரிடா சிரின்னு |