பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி55

     ‘‘முத்துக்குமரனும் நானும் பாய்ஸ் கம்பெனிக் காலத்திலிருந்தே இணை
பிரியாத நண்பர்கள். எனக்குத் தெரிந்த முதல் தமிழ்க் கவிஞன்
முத்துக்குமரன்தான். அவனும் நானும் அந்த நாளில் பாய்ஸ் கம்பெனி வீட்டில்
ஒரு பாயில் படுத்து உறங்கி யிருக்கிறோம். அவனை நான் ‘வாத்தியார்’ என்று
செல்லமாக அழைப்பது வழக்கம். அப்படிப்பட்ட வாத்தியார் அன்றும் சரி,
இன்றும் சரி, பல விஷயங்களில் எனக்கு ஆசிரியனாகவே இருந்து வருகிறான்,
அவனைத் துணைக் கொண்டு நான் தொடங்கும் இந்த நாடக மன்றம்
வெற்றிகரமான பல நாடகங்களைத் தயாரித்து அளிக்கும் என்று உங்களுக்கு
உறுதி கூறுகிறேன். உங்கள் அன்பும் ஒத்துழைப்பும் எங்களுக்கு எப்போதும்
தேவை’’ - என்று கோபால் பேசியதும் அவனையும் முத்துக்குமரனையும்
அருகருகே நிற்கச் சொல்லி ‘பளிச்’ ‘பளிச்’ என்று சில பத்திரகைக்காரர்கள்
படம் பிடித்துக் கொண்டனர். அந்தப் படங்களை எடுக்கும் போது அருகில்
சிறிது தள்ளி நின்ற மாதவியைக் கூப்பிட்டு, ‘என்னையும் உன்னையும் சேர்த்து
ஒருத்தனும் படம் எடுக்க மாட்டான் போலிருக்கே’ - என்று சிரித்துக்
கொண்டே அவள் காதருகில் மெல்லக் கூறினான் முத்துக்குமரன். ‘நாமே
எடுத்துக்கிட்டாப் போச்சு’ - என்று அவள் அவனிடம் பதிலுக்குக் கூறி
நகைத்தாள். அவள் அப்படிப் பதில் கூறியது அவனுக்கு மிகவும்
பிடித்திருந்தது. விருந்தினர்களுக்கு அவனும் சில வார்த்தைகள் பேச
வேண்டுமென்று கோபால் கேட்டுக் கொண்டான். முத்துக்குமரன் பேசினான்.
சிரிக்கச் சிரிக்கப் பேசினான். இரண்டு மூன்று நிமிடத்திலேயே
விருந்தினர்களைத் தன் பேச்சினால் வசியப்படுத்தி விட்டான் அவன்.
அவனுடைய பேச்சிலிருந்த நகைச்சுவையும், குத்தலும் கூட்டத்திற்கு வந்திருந்த
விருந்தினர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன.