| ‘‘என்ன வாத்தியாரே! இங்கே வர்ரியா! ‘சோம பானம்’லாம் ரெடியாயிருக்கு. ஒரு கை பார்க்கலாம்...’’ ‘‘வேண்டாம்பா...நான் எழுதிக்கிட்டிருக்கேன். நல்லா எழுத வர்ரப்ப பாதியிலே விட்டுட்டு வரவேண்டான்னு பார்க்கிறேன்.’’ ‘‘அங்கேயே கொடுத்தனுப்பட்டுமா?’’ ‘‘வேண்டாம்; சொன்னாக் கேளு...’’ ‘‘சரி! அப்புறம் உன் இஷ்டம்’’ - என்று கூறி ஃபோனை வைத்துவிட்டான் கோபால். - முத்துக்குமரனின் மனத்திலோ மாதவியே பெரிய போதையை உண்டாக்கி அப்போது அவனை எழுதுவித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய நாசியில் இன்னும் அவள் மேனியின் நறுமணம் நினைவு இருந்தது. அநுபவம் நிறைந்திருந்தது. அவளுடைய பொன் மேனியின் மென்மை இன்னும் அவனுடைய கைகளில் நிறைந்திருந்தது. அவற்றைவிட அதிகமான எந்தச் செயற்கை மதுமயக்கமும் அப்போது அவனுக்குத் தேவையாயிருக்கவில்லை. அவளே அவனுடைய இதயத்தின் எல்லாப் பகுதிகளையும் நிறைத்துக் கொண்டு ஒரு பெரிய மது மயக்கமாக உள்ளே உறைந்து போயிருந்தாள். அவளை அற்புதமாக அலங்கரித்துப் பாண்டியப் பேரரசனுடைய திருக்கொலுவில் கழைக் கூத்தாட வைத்து இரசித்துக் கொண்டிருந்தான் அவன். கழைக் கூத்தின் போது, கழைக்கூத்தி பாண்டியனை நோக்கிப் பாட வேண்டிய பாடலும்கூட நன்றாக வந்து விட்டது. ‘‘நெஞ்சின் எல்லையில் நீயாட நீள் கழையினில் நானாடுவேன்’’
| - என்ற பல்லவியோடு மிக இனிய இராகமொன்றில் மெட்டமைத்து அந்தப் பாடலை அவன் இயற்றியிருந்தான். அன்றிரவு அவன் படுக்கப் போகும் போது ஏறக்குறைய விடிகாலை மூன்று மணிக்கு மேலாகி விட்டது. |