| ருந்த மற்றப் படங்கள் எல்லாம் சாமி படங்களாயிருந்தன. குருவாயூரப்பன் படம், பழனி முருகன், வேங்கடாசலபதி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றினிடையே தென்பட்ட இந்த ஒரு படம் மட்டும் அவன் கண்களை உறுத்தியது. மாதவி அவன் சாப்பிட்டு முடிப்பதற்கு இரண்டு மூன்று நிமிஷங்களுக்கு முன்பே முடித்திருந்ததனால் அவன் அனுமதியுடன் எழுந்து போய்க் கைகழுவி விட்டு வந்த முத்துக்குமரனுக்கு அந்த ஹாலில் இப்போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மாதவியும் கோபாலும் சிரித்துக்கொண்டு நின்ற புகைப்படத்தை அங்கே காணவில்லை. படத்தை மாதவி கழற்றியிருக்க வேண்டுமென்று அவனால் அநுமானிக்க முடிந்தது. அவளோ ஒன்றும் வாய் திறந்து கூறாமல் அதைக் கழற்றி விட்ட திருப்தியோடு சிரித்துக்கொண்டு நின்றாள். அவன் கேட்டான்.: ‘‘ஏன் படத்தைக் கழற்றி விட்டாய்?’’ ‘‘உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றியது. கழற்றிவிட்டேன்...’’ ‘‘எனக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் நீ விட்டு விடுவதென்பது சாத்தியமா மாதவி?’’ ‘‘சாத்திய அசாத்தியங்களைப் பற்றிக் கேட்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காததை நான் விட்டுவிட ஆசைப்படுகிறேன்.’’ பழங்கள் நிறைந்த தட்டையும், வெற்றிலைப் பாக்குத் தட்டையும் அவன் முன்னே வைத்தபடியே பேசினாள் அவள். மாதவியின் பிரியமனைத்தையும் உடனுக்குடனே தாங்கிக் கொள்ள இடம் போதாமல் தன் மனம் சிறிதாயிருப்பது போன்ற உணர்ச்சியை மீண்டும் அவன் அடைந்தான். அவள் ஒவ்வொரு விநாடியும் தனக்காகவே உருகிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். புறப்படும்போது அவளும் மாம்பலம் வரை கூட வந்துவிட்டுத் திரும்புவ |