பக்கம் எண் :

92சமுதாய வீதி

இருந்தான். ஜில் ஜில் வாயில் வெற்றிலைச் சிவப்பு, கைவிரல்களிடையே
புகையும் சிகரெட், அவனைவிடச் சற்றுப் பருமனாகக் கையில் ஒரு லெதர் பாக்.
இந்தக் கோலத்தில் ‘ஜில் ஜில்’ ஒரு கேள்விக் குறிபோல் முதுகு கூனி
நின்றான்.

     ‘இவன் சட்டை போட்டுக் கொள்ளவில்லை. இவன் முதுகில் யாரோ
சட்டையைத் தொங்கவிட்டு அனுப்பியிருக்கிறார்கள்’’...என்று மாதவியின்
காதருகே போய் முணுமுணுத்தான் முத்துக்குமரன். அவள் மேலும் அடக்க
முடியாமல் சிரிப்பதைக் கண்டு,

     ‘‘வாத்தியார் என்ன ‘ஜோக்’ சொர்றாரு?’’...என்று அவளை வினவினான்
கோபால்.

     ‘‘ஒண்ணுமில்லே! ஏதோ நாடகத்திலே வந்த ஹாஸ்யம்...’’ - என்று
மாதவி மழுப்பினாள்.

     ‘‘நாளைக்கு உங்களை ஒரு பேட்டி கண்டு ‘ஜில் ஜில்’லிலே போடணும்னு
இருக்கேன். நீங்க பெரிய ஜீனியஸ்னு நடிகர் திலகம் சொன்னாரு’’ - என்று
ஜில் ஜில் முத்துக்குமரனை முகஸ்துதி செய்யத் தொடங்கினான். சிறிது
நேரத்தில் அவர்கள் நால்வரும் ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனைப் பார்க்கச்
சென்றார்கள். ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனுடைய ஓவியக்கூடம் சிந்தாதிரிப்
பேட்டையில் ஒரு பழைய கால பாணி வீட்டில் இருந்தது. தலைமை ஓவியனான
அங்கப்பனுக்குக் கீழே ஐந்தாறு குட்டி ஓவியர்கள் வேலை செய்து
கொண்டிருந்தார்கள். வர்ணக் கறை படியாத சுவர்களே அந்த மாளிகையில்
இல்லை. கூட்டம் கூடி விடாதபடி கவனமாக அந்த மாளிகை ஓரமாகத்
தெருவில் காரை நிறுத்திவிட்டு அவர்கள் இறங்கி உள்ளே போயிருந்தார்கள்.

     ஜில் ஜில் கனியழகன் அங்கப்பனை நீ, நான் என்று உரிமையோடு
பேசினான்.