| ‘‘பார்த்தியா அங்கப்பன்? எத்தினி பெரிய நடிகரை உன்னைத் தேடிக் கூட்டியாந்திருக்கேன்? மாமண்டூர்ச்சிங்கன் உலைக்களத்தைத் தேடி மும்மூர்த்திகளே வருவார்கள் என்று கம்பர் பாடி வச்சமாதிரி உன்னைப் பத்தியும் பாடலாம். அப்படிப்பட்டவங்கல்லாம் உங்கிட்ட வந்திருக்காங்க இன்னிக்கி.’’ காதில் சொருகியிருந்த பென்சிலை விஷமம் செய்து கொண்டே அங்கப்பன் அவர்களை வரவேற்றான். அந்தக் காலத்திலே கன்னையா கம்பெனி ஸீன்ஸ் எப்படி இருக்கும் என்பது தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டையிலே முக்கால் கப் காப்பி என்ற ‘எகானமி டிரிங்க்’ வசதி இருந்த பொற்காலம் வரை அங்கப்பனின் வரவேற்புரையில அடங்கியிருந்தன. நடுவில், ‘‘அந்த நாளிலே ராமானுஜு லு நாயுடு கம்பெனியிலே பலராம ஐயர்னு ஒருத்தர் ஸ்திரீ பார்ட் கட்டுவாரு, இந்த அம்மா மாதிரியே, பார்த்தாலோ பேசினாலோ கிளி கொஞ்சும். சிரிச்சா முத்து உதிரும் போங்க’’ - என்று மாதவியைச் சுட்டிக் காட்டிச் சம்பந்தமில்லாமல் மாதவியைப் புகழ்ந்து வைத்தான் அங்கப்பன். ‘‘நம்ம சார்கூட மதுரையிலே ஒரு பிரமாதமான பாய்ஸ் கம்பெனியிலே ‘ஸ்திரீ பார்ட்’ தான் போட்டுக்கிட்டு இருந்தாரு’’ - என்று அப்போது ஜில் ஜில் குறுக்கிட்டுக் கூறியதைக் கோபால் அவ்வளவாக ரசிக்கவில்லை. ‘‘எதை மறந்தாலும் நான் ‘ஸ்திரீபார்ட்’ போட்டதை மறக்க மாட்டீரு போலிருக்கு உனக்கு ஏன்யா எப்பப் பார்த்தாலும் ஸ்திரீகளைப் பத்தியே நினைப்பு?’’ என்று தன் கோபத்தை ஹாஸ்யம் போன்ற சொற்களின் வடிவிலே மாற்றி வெளியிட்டான் கோபால்; அப்போது மாதவியும் முத்துக்குமரனும் ஒருவரையொருவர் குறிப்பாகப் பார்த்து நகைத்துக் கொண்டனர். |