உ சிவமயம் அறிவுநூற் புலவர் (Professor of Philosophy) ராய்பகதூர் P. சுந்தரம் பிள்ளை (எம்.ஏ.) அவர்கள் வரலாற்றுச் சுருக்கம் நீர்வளம் நிலவளஞ் செறிந்த சேரநாடாகிய திருவிதாங்கூரைச் சேர்ந்தது துறைமுகப் பட்டினமாகிய ஆலப்புழை என்னும் ஊர். இவ்வூரில், வேளாளர் மரபில் திருவாளர் சுந்தரம் பிள்ளை யவர்கள் கி.பி. 1855-ம் ஆண்டு (1030 M.E.) பங்குனித் திங்கள் 28-ம் நாள் பிறந்தனர். இவர் தந்தையார், பெருமாள் பிள்ளை என்னும் இயற் பெயர் வாய்ந்தவர் ; ஒரு பெரிய துணி வணிகர். இவர் மிகுந்த கடவுட் பற்றும் நுட்பமான அறிவும் அமையப் பெற்றவர் ; தேவாரம், திருவாசகம், திருக்குறள், திருவிளையாடற் புராணம் முதலிய அருட்பெரு நூல்களை நெட்டுருச் செய்து சொல்லுந் திறமுடையவர். மாடத்தி என்பது இவர்தம் மனைவியார் பெயர். தங்கட்கு நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லா திருந்தமையால் தாய் தந்தைய ரிருவரும் மிக வருந்தினார்கள். மதுரைமா நகரில் திருக்கோயில்கொண் டெழுந்தருளி யிருக்கும் தம் குலதெய்வமாகிய சோமசுந்தரக் கடவுளை நோக்கித் தவங் கிடந்தனர். அத் தவத்தின் பயனாகச் சில காலத்தில் ஓர் அழகான ஆண் மகவு இவர்கட்குப் பிறந்தது. இம்மகவுக்குச் சுந்தரம் என்னும் அப்பிரானது திருப்பெயரை அவர்கள் இட்டு வழங்கிவந்தனர். பெற்றோர்கள் இச்சிறு மகவை மிக அருமையாகப் பாராட்டி வளர்த்தார்கள். குழவிப் பருவம் நீங்கிப் பிள்ளைமைப்பருவம் அடைந்து ஐந்து ஆண்டு நிரம்பியதும், இவரை, இவர் தந்தையார் தமிழ்க்கல்வி கற்க ஆலப்புழையில் உள்ள ஒரு பள்ளியில் வைத்தனர். பள்ளிக்கூடத்திற் பயிலும்போதே, இவர் தந்தையார் இவருக்கு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, நன்னெறி, நீதிநெறி விளக்கம் முதலிய நீதி நூல்களையும், தேவாரம், திருவாசகம்
|