முதலிய அருட்பாடல்களையும், திருக்குறள் முதலிய அறிவுப் பெருநூல்களையும் ஒழுங்காகக் கற்பித்து வந்தனர். இதன் பயனாக இவர் தமது பன்னிரண்டாம் ஆண்டிலேயே தாய்மொழியாகிய தமிழ்மொழியிற் பேசவும் எழுதவும் வல்லுநராயினர். பின், ஆலப்புழையிற் புதிதாக அமைக்கப்பட்ட ஆங்கிலக் கல்விச்சாலையில் ஆங்கிலங் கற்கத் தொடங்கி (Pre - Entrance) பிரவேசத் தேர்ச்சிப் படிப்புவரை கல்விகற்றனர். அக்காலத்தில் அக்கல்விச்சாலைத் தலைவராயிருந்த மிஸ்டர் பீல் (Mr. Peel) என்னுந் துரைமகனார் பிள்ளையவர்களுடைய அறிவு நுட்பத்தையுஞ் சுறுசுறுப்பையும் ஆராய்ச்சி யறிவையுங் கண்டு வியந்து, இவர் பின்வாழ்க்கையில் பெரும்புகழ் எய்துவர் என்று பலமுறையும் பலரிடத்துங் கூறியுள்ளார். அதன் பின்னர், இவர் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிற் சேர்ந்து உயர்தரக் கல்வி பயிலப்புகுந்தனர். அவ் வாண்டில் பத்தாவது வகுப்பில் இவர் முதல்வகுப்பில் முதலாவதாகத் தேர்வு பெற்றனர். அதனால், அரசியலார் இவருக்குத் திங்கள் தோறும் எட்டு ரூபாய் உதவிப்பணங் கொடுத்து வந்தனர். இவ் வுதவித் தொகை இவருக்கு (B.A.) பி.ஏ., தேர்வு முடிவுவரை கொடுக்கப்பெற்று வந்தது. இவர் ஒவ்வொரு வகுப்பிலுந் திறமையாகக் கல்விகற்று வந்தனர். இவருடைய கல்வித் திறமையினையும், கூர்த்த மதியினையுங் கண்ட கல்லூரி யாசிரியர்கள் இவர்பாற் பேரன்பு பூண்டனர். இவர், 1876-ம் ஆண்டில், திருவனந்தபுரத்தில் முதன்மையாகவும், சென்னை மாகாணத்தில் நான்காவதாகவும் பி.ஏ. தேர்வு தேறினார். இவர் மாணவராயிருந்த பொழுது, தம் தாய்மொழியாகிய தமிழ் மொழியைப் பயில்வதிலும், அறிவு நூல்களை ஆராய்வதிலும் அவாமிக்குடையராய் விளங்கினார். பி.ஏ. தேறியதும் இவர் கல்வித் திறமையறிந்த (Mr. Ross) (மிஸ்டர் ராஸ்) என்னுங் கல்லூரித்தலைவர், இவரை அக்கல்லூரியிலேயே எப்.ஏ., பி.ஏ. வகுப்புகளுக்கு (History) வரலாற்று நூலும், பி.ஏ. முதல் வகுப்புக்கு (Philosophy) அறிவு நூலுங் கற்பிக்கும் ஆசிரியராக அமர்த்தினார். இவர் மாணவர்கட்குக் கல்வி கற்பிப்பதிற் திறமை மிக்கவராக விளங்கினார். இவர் கல்வி கற்பிக்கும்பொழுது, மாணவர்கள் இவரது விரிவுரையிற் பெரிதும் ஈடுபட்டிருந்து
|