மனோன்மணீயம்
3

கேட்டு மகிழ்வார்கள். ஆசிரியர் வேலையில் அமர்ந்தபின், இவர் தம் இருபத்தோராம் ஆண்டில் (1877-ஆம் ஆண்டு தைத்திங்கள்) நற்பண்புகள் நிரம்பிய சிவகாமி என்னும் பெண்ணரசியை மணந்து இல்லறவாழ்க்கை நடத்தி வந்தனர்.

அக்காலத்தில், சென்னைக் கல்வித்துறைத் தலைவராயிருந்த (Dr. Duncan) டாக்டர் டன்கன் என்னுந் துரைமகனார், திருவனந்தபுரம் அரசர் கல்லூரித் தலைவர் (Mr. Ross) (மிஸ்டர் ராஸ்) துரையவர்களைத் திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலைக்குத் தக்க ஒரு தலைவரைத் தெரிந்து அறிவிக்கும்படி கூறினார். இதுகேட்ட ராஸ் துரையவர்கள் சுந்தரம்பிள்ளையவர்களே அவ் வேலைக்குத் தக்கவரெனக் குறிப்பிட்டனர். அவ்வாறு அவர் குறிப்பிடவும், கல்வித்துறைத் தலைவரவர்கள் 1877-ம் ஆண்டிறுதியில், திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலைக்குச் சுந்தரம்பிள்ளையவர்களைத் தலைவராக அமர்த்தினார்கள். இவர் தலைவராயமர்ந்து அக்கல்விச் சாலையை மிக்க திறமையுடன் நடத்திவந்தார். இவர் அங்குச் செய்த பெருமுயற்சியின் பயனாகப் பத்தாவது வகுப்பு வரையிருந்த அக்கல்விச்சாலை (F.A.) எப்.ஏ. வகுப்பமைந்த இரண்டாவது வகுப்புக் கல்லூரி (Hindu College) யாக மாறியது.

இவர் திருநெல்வேலியி லிருந்தபொழுது, கோடகநல்லூர் உயர்திரு. சுந்தர சுவாமிகளென்னும் பெரியாரைக் கண்டு, அவரொடு பழகி அவரது தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவருக்கு மாணவராயினர். இன்னும், பிள்ளையவர்கள் தம் ஆசிரியரிடம் சமயநூல்கள் பல கற்று, அவைகளில் அறிவு நிரம்பப் பெற்றார். இக்காலத்திற்றான் இவர், மனோன்மணீயம், நூற்றொகை விளக்கம் என்னும் அரிய நூல்களை எழுதத் தொடங்கினர். இவர் மனோன்மணீயம் என்னும் அரிய தமிழ் நாடகநூலை யியற்றி, அந் நூலின் சிறப்புப்பாயிரத்தில் "தமிழ்த்தெய்வ வணக்க"ங் கூறி, அதில் தமிழ்மொழியின் சிறப்பை மிக அழகுபெற எடுத்துக் காட்டியிருக்கின்றார். இவர் பாடியிருக்கின்ற அச் சில பாக்களினாலேயே இவர் செய்யுளமைக்குந் திறமை மிக்கவரென்பது நன்கு புலனாம். தமிழ்த்தெய்வ வணக்கப் பாக்கள் சிலவே யாயினும், அவை பொருட் செறியும் இன்சுவையும் பொருந்தி மிளிர்கின்றன. இவர், தம் ஆசிரியரிடத்து வைத்திருந்த பெரும் பற்றையுஞ் செய்ந்நன்றியறிதலையுங் காட்டும்பொருட்டு, மனோன்