உறைவிடம் என்க. 54. நயப்பு - அன்பு. 55. [பொதுவாகக் கூறிய முனிவர் மொழிக்கு, நாராயணன் கழுவேற வுடன்பட்டதைச் சுட்டுவதாக ஜீவகன் பொருட்படுத்திக் கொள்ளுகிறான். குடிலனைச் சுட்டிக் கூறிய பாய்மரமும் நாராயணனாகவே மயங்குகின்றான்.] 59. தெருட்டிட - தெருளச்செய்ய, தெளிவுபடுத்த. 60.[வேற்றுமையுருவாய் - மாறுபாடு செய்தலே இலக்கணமாகவுடைய.] 66. மேதை - அறிவு. 70. இயல் - அரசியல். 73. காலக்கரப்பே - காலவசத்தாலுண்டாகும் மறைப்பு. 79. புரி - திருநெல்வேலி நகரம். 81. பொறித்த - தாபித்த, நிறுவிய. 83. கவந்தம் - உடற்குறை. 94. தொடரியல் - சங்கிலித் தொடரினியல்பு. 100. மனக்கோள் - மனதின் கொள்கை. 107. தாதான்மியம் - ஒற்றுமைப்பட்டிருத்தல். பலம் - பயன். இதனால் அரசன் திருநெல்வேலிக் கோட்டையில் மனமொன்றி வாழ்ந்த தன்மையின் பயனைவிளக்கியவாறு. சீவகன் குடிலன் வசத்தனாகியே ஒழுகும் நிலைமையைக் குறித்தபடியுமாம். 108. வெங்கரா - கொடியமுதலை. "மூர்க்கனும் முதலையும் கொண்டதுவிடா" என்பது கருத்து. 111. பிற்கிளை - மகவு முதலியன. 112. பிராந்தி - மயக்கம். 116. ஒரு மலர் - ஒப்பற்ற மனோன்மணியாகிய பூ. 124-127. "நெடும் புனலுள் வெல்லுமுதலை யடும்புனலி னீங்கிதனைப் பிற" - குறள் அதி. 50 செ. 5. என்ற கருத்து இவ்வரியிற் காணப்படும். 135. சாலிபுரம் - நெல்நகர், நெல்வேலி;புரம் - சரீரமுமாம். புலம் - இடம், ஐம்புலம். மாபதி - மதுரை, பரம்பொருள். 157. மறலி - எமன். 161. யூனையன் - மகள், தனையன் ஆண்பால். 163. வியாகுலம் - துக்கம். 167. [சிறுகொடி - மனோன்மணி.] 166-168. பாதுகாவலையுடைய இந் நகரமாகிய நெருப்பி லகப்பட்டு வருந்துகின்ற உன்னுடைய சிறிய பூங்கொடி போன்ற மனோன்மணியை வேறிடத்திற்கு மாற்றுவோம். அக்கொடி சிறந்த எல்லையில்லாத பல பாண்டியர்களை உண்டாக்கிச் சந்ததியை விருத்திசெய்ய உரியது. 173. பரசியம் - பலர்க்கும் வெளிப்படையாவது. இதன் எதிர்மொழி இரகசியம். 175. பிரதிபந்தம் - தடை. 178. இமைக்கொட்டும் - இமையாடும் பொழுதும். 179. குகுநாள் - அமாவாசைத்தினம். 180. பரவை - கடல், பரவையின் பாடாவது அமாவாசை நாளில் மழையோடு கூடிய பெருங்காற்றால் வீசப்பட்ட கடல் படும் குழப்பம். 185. எவன் - எவ்விதம். 186. சமழ்ப்பு - நாணம். 190. நளி - தேன். 191. வாற்புற நஞ்சால் - வாலின் இடத்திலுள்ள விடத்தினால்; "இருந்தேளுக்கு வாய்த்த விடம் கொடுக்கில் வாழும்" என்பது கவி. 193. சுதந்தரம் - உரிமை. 195. பிரை உறுபாலென - பிரை இடப்பெற்ற பால் தோய்தல் போல. உதிரம் - இரத்தம், குருதி. 197. தொடு - தோண்டப்பட்ட.
|