பக்கம் எண் :

மனோஹரன்1

முதல் அங்கம்.


முதற் காட்சி.

 இடம்:- அரண்மனையில் பத்மாவதிதேவியின் அறை. காலம் - காலை.


 
பத்மாவதிதேவி மஞ்சத்தின்மீது வீற்றிருக்க மனோஹரன் தன் தாயார்
 பாதத்தருகில் உட்கார்ந்திருக்கிறான். அருகில் தன் தாதி தாங்க
 விஜயாள் அழுதவண்ணம் நிற்கிறாள். நீலவேணி பத்மாவதிக்குப்
 பின்புறமாக நிற்கிறாள்; சத்தியசீலரும் ராஜப்பிரியனும் ஓர் புறமாக
 நின்று மெல்லப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பத். கண்ணே, மனோஹரா, நமது படைகளெல்லாம் பாண்டிய
நாட்டை நோக்கி எப்பொழுது புறப்படுவதாகக் கூறினை?


ம. அம்மணி, இன்றைத்தினம் முப்பது நாழிகைக்கெல்லாம்
புறப்பட வேண்டுமென்று, நமது குலகுரு காலம் நிர்ண
யித்திருக்கிறார்.

பத். ஆனால் நான் உன்னைத் தாமதிக்கும்படிச் செய்யலாகாது,
சீக்கிரம் புறப்படு, கண்ணே, சுத்த வீரனாகிய உனக்குப்
பெண்பாலாகிய நான் என்ன உரைக்கக்கூடும்?

            ராகம் - பியாகடை- தாளம் - ஆதி.


                      பல்லவி.

            மனோஹராவுன் மகிமை யறிந்தும்
            மாதோ நான் எடுத்துரைப்பது         (ம)


                    அநுபல்லவி.

            தன்னே ரில்லா தயாளவீரா
            தானவர் பணியும் சூரா              (ம)