நாலாவது அட்டவணை சதுரப்பாலை இராகங்கள். இதில் வரும் இராகங்களை நாம் கவனிப்போமானால் கால் முக்காலாகச் சேர்ந்து வரும் சுரங்களைத் தவிர மற்றும் சுரங்கள் யாவும் ஆயப்பாலையின் சுரங்களாகக் காண்போம். ரிஷப தைவதங்களில் நாலாவது அலகோடு கால் முக்கால் சேர்ந்திருப்பைதையும் காந்தார நிஷாதங்களில் மூன்றே முக்கால் மூன்றே முக்காலாகவும், நாலேமுக்கால் நாலேமுக்காலாகவும் சேர்ந்து வருகிறதையும் காணலாம். மற்ற சுரங்கள் யாவும் ஆயப்பாலையின் அரை அரை சுரங்களாகவே தெரிகின்றன. ஆனால் தேவகாந்தாரியிலோ காந்தார நிஷாதங்கள் ஒரு அலகுகுறைந்து ஐந்தாவது ஐந்தாவதாக ஒற்றைப் பட்டு வருகின்றன. இப்படி வட்டப்பாலை முறையால் காந்தார நிஷாதங்களில் ஒரு அலகு குறைந்தும் சதுரப்பாலை முறையால் கால் முக்காலான அலகுகள் சேர்ந்தும் வழங்கிவருவதனால் அதிக இன்பமாயிருக்கிறது. இப்படி வட்டப் பாலை முறையால் ஆறலகுள்ள காந்தார நிஷாதங்களுக்கு ஒவ்வொரு அலகு குறைத்து ஐந்தலகில் சொல்லுவதும் ஆயப்பாலை முறைப்படி நாலலகு வரவேண்டிய ரிஷப தைவதங்களில் கால் முக்காலான சுருதிகள் சதுரப்பாலை முறையால் சேர்த்துச் சொல்லுவதும் மிக இனிமையுடைய தாவதற்குக் காரணமென்று தோன்றுகிறது. எப்படி என்றால் தீரசங்கராபரணத்தில் ஜன்னியமான ச, ரி, ம, ப, த, ச, ச, நி, த, ப, ம, க, ரி, ச என்ற ஒரே ஆரோகண அவரோகண முடைய தேவகாந்தாரியையும் ஆரபியையும் கவனிப்போமானால் தேவகாந்தாரியில் ரிஷபதைவதங்கள் நாலே முக்கால் நாலே முக்கால் அலகுடையதாகவும் ஆரபியில் நாலேகால் நாலேகால் அலகுடையதாகவும் வருகின்றன. அப்படி காந்தார நிஷாதத்தில் வட்டப்பாலை முறையால் ஒரு அலகு குறைந்து ஐந்தாவது ஐந்தாவதாகவும் ஆரபியில் அலகு குறையாமல் ஆறு அலகு சாந்தாரம் அல்லது அந்தர காந்தாரமும் ஆறு அலகு நிஷாதம் அல்லது காகலி நிஷாதமும் வருகின்றன. இதுபோல் ஆயப்பாலையின் சுத்த சுரங்களில் ஒரு அலகு குறைந்துவரும் வட்டப்பாலை முறையும் அரை அலகு குறைந்து வரும் திரிகோணப் பாலை முறையும் கால் கால் அலகுகள் சேர்ந்து வரும் சதுரப்பாலை முறையும் பூர்வம் தொட்டுவழங்கி வந்ததாகத் தெரிகிறது. இக் கூடுதலான சுரங்கள் யாழின் 12 மெட்டுகளில் இழுத்துக் கமகமாய் வழங்கப்படுகின்றன வென்று நாம் அறிவோம். இப்படி கமகமாய் அல்லது நுட்ப சுரங்களைச் சேர்த்து வழங்குவதைப் பாடலமுதமென்று பூர்வதமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கிறார்கள். பாடலமுதமென்பது இராகங்களில் இனிமையான இடமென்று பொருள் படும். பாடலமுத மென்பதையே ஜீவசுரமென்று மற்றவர் சொன்னார்கள் என்று நினைக்க ஏது விருக்கிறது. எப்படி யென்றால் நாலாவது அட்டவணையில் ரிஷபதைவதங்கள் கால் முக்காலாக கூடுதலாக வருவதாகக் காண்கிறோம். இப்படி கூடுதலாக வரும் சுரங்களே அந்தந்த இராகங்களுக்கு ஜீவசுரமாம். அப்படியே ஒவ்வொரு இராகத்திலும் கூடுதலாக வரும் ரிஷபதைவதங்களும் காந்தார நிஷாதங்களும் மத்திமமும் ஜீவசுரமாகச் சொல்லப்படுகின்றன. சங்கராபரணத்தில் ரிஷப தைவதங்களையும் தோடியில் காந்தார நிஷாதங்களையும் ஜீவ சுரமாகச் சொல்வதை அட்டவணையில் காண்போம். இவைகள் சீவசுரங்களாக வருவதற்குச் சில நியாயங்களுண்டு. அதோடு ஒரு இராகத்தில் இன்னின்னது சீவசுரமாய் வரலாமென்று குறிக்கிறதற்குக் கணக்கு முண்டு. அவைகளை இரண்டாம் புத்தகத்தில் விபரமாகச் சொல்லுவோம். ஆரோகண அவரோகணங்களைப் பின்வரும் 881-ம் பக்கத்தில் காண்க.
|