இந்த அட்டவணையையும் சகஸ்திரபுத்தி அட்டவணையையும் ஒத்துப் பார்ப்போமேயானால் ஆதார ஷட்ஜத்தையும் தாரஷட்ஜத்தையும் தவிர வேறு எந்த சுரங்களும் ஒத்திருக்க மாட்டாது. பஞ்சமமும் மத்திமமுமே ஒத்திருக்காவிட்டால் நாம் இதில் சொல்லக்கூடியது என்ன இருக்கிறது. ஒரு ஸ்தாயியில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு சுரங்களும் மிக முக்கியமானவை. சங்கீதத்தில் இவ்விரண்டு சுரங்களுமில்லாதிருக்குமானால் ஷட்ஜமத்திற்கு வேறு பொருத்தமுள்ள சுரம் இல்லாமற் போகும். மற்று எந்த சுரங்கள் வித்தியாசப்பட்டாலும் மத்திம பஞ்சமங்கள் ஒற்றுமையாயிருக்க வேண்டும். சங்கீத ரத்னாகரர் இப்படிச் சொல்லவில்லை. மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இதையே இன்னும் அநேகர் வெவ்வேறுவித அர்த்தம் செய்திருக்கிறார்கள். அவைகளில் சிலவற்றை ஒன்றின்பின் ஒன்றாய்ப் பார்ப்போம். இவர் ஒரு ஸ்தாயியை 22 பாகங்களாகப் பிரித்து அதில் முதல் நாலு சுருதியையும் ஷட்ஜமத்துக்குரியதென்கிறார். ஆனால் ஷட்ஜமத்தின் நாலாவது சுருதி மேருவினிடமாகப் பேசுகிறதை நாம் அறிவோம். மற்றவை யாவும் இங்கே சொல்வது அவசியமல்ல. ஆனால், சங்கீதரத்னாகரர் இப்படிப்பட்ட பங்குவீதம் சொல்லவில்லை.
|