ஐந்தாவது-50-வது அட்டவணை. மேற்காட்டிய அட்டவணையை நாம் கவனிக்கையில் இது வரையும் சுருதிகளைப் பற்றிச் சொல்லிய கனவான்களின் ஸ்தானங்கள் இன்னின்ன அளவோடு வருகிறதென்று காண்கிறோம். அவரவர்கள் கொடுத்த பின்னங்கள் அவைகளுக்குச் சரியான சென்ட்ஸ்களுடையதாய் மாற்றப்பட்டிருக்கிறது. சுருதி ஸ்தானங்களில் எந்தெந்த சுருதியாகச் சொல்லுகிறார்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. இதில் 498 சென்ட்ஸ்களுடைய (3/4) என்ற மத்திமம் தந்தியின் 24 வது அங்குலத்தில் 720 ஓசையின் அலைகளுடையதாய் வருகிறது. அதை சகஸ்தரபுத்தி 11 வது சுருதியாகவும், ராஜா சுரேந்திர மோகன் தாகூர் 9 வது சுருதியாகவும், டைடானிக் ஸ்கேலில் 7 வது சுருதியாகவும், கிளமென்ட்ஸ் 10 வது சுருதியாகவும், பண்டர்க்கார் அதை 5 வது சுரமாகவும் சொல்லுகிறார்கள். ஆனால் சங்கீத ரத்னாகரரோ 491 சென்ட்ஸ்களுடையதாய் தந்தியின் நீளத்தில் 24.10 அளவில் வரும் 717 ஓசையின் அலைகளுடைய இடத்தில் வரும் சுருதியை 9 வது சுருதி வருகிறதென்று சொல்லுகிறார். இப்படி 7, 9, 10, 11 என்ற வெவ்வேறு சுருதி ஸ்தானங்கள் (3/4) என்ற ஒரே இடத்தில் வருகிறதாகச் சொல்லுகிறதை நாம் காண்போம். முன் போலவே 702 சென்ட்ஸ்களுள்ளதும் (2/3) என்ற தந்தியின் பாகத்தில் வரும் பஞ்சம ஸ்தானத்தைக் கவனிப்போமானால் ஒருவர் அந்த இடத்தையே 10 வது சுருதியாகவும் 12 வது சுருதியாகவும் 13 வது சுருதியாகவும், 14, 15 வது சுருதியாகவும் சொல்லுகிறார்கள். ஆனால் சாரங்கரோ 709 சென்ட்ஸ்களுள்ள (81/122) என்ற பின்னத்துக்குச் சரியான இடத்தில் 13 வது சுருதி வர வேண்டுமென்கிறார். இப்படியே அவரவர்கள் சொல்லும் சுருதி ஸ்தானங்களும் சுரஸ்தானங்களும் மிக ஒழுங்கீனமுடையவைகளாயும் பேதமுடையவைகளாயும் வெவ்வேறு அளவுடையவைகளாயும் வருகின்றன. "கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல்" ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டுமென்று ஸ்தாபிக்க வந்தவர்களினால் எத்தனையோ ஏராளமான சுருதிகள் புறப்பட்டிருக்கின்றன. சாரங்கர் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரலாமென்று சொன்னவர் 19 சுருதிகளுண்டென்றும், மற்ற மூன்றும் வேறு பெயர்களையடைவதினால் அப்படி வருகிறதென்றும் சொல்லுகிறார். ஒருவர் 16 என்றும், ஒருவர் 17 என்றும், மற்றொருவர் 18 என்றும், பின் ஒருவர் 20 என்றும், வேறொருவர் 21 என்றும், 24 என்றும், 25 என்றும், 27 என்றும், 29 என்றும், 53 என்றும் இதன் முன் சொல்லியிருக்கிறார்கள். இதில் ஒருவர் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தானிருக்கிறதென்று சொல்ல வந்தவர் "பிள்ளையாரைப் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" போல 22 ஸ்தாபிக்க பல வழியிலும் பிரயாசைப்பட்டு முடியாமல் 53 என்று போய் அதிலும் வழி காணாமல் பன்னிரண்டில் வந்து முடிந்தார். இவர் போன பல வகையிலும் 78 நூதனமான சுருதி ஸ்தானங்கள் கிடைக்கின்றன. அவற்றை 382-385-வது பக்கங்களில் வரும் 20-வது அட்டவணையாய்க் காட்டியிருக்கிறோம். மற்றவர்கள் சொல்லும் வெவ்வேறு ஸ்தானங்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்பொழுது சுமார் 158 ஸ்தானங்கள் காணப்படுகிறது. இது சாரங்கர் சொன்ன 22 சுருதியை விட்டு விட்டு சுருதிகள் அனந்த பேதம் என்ற அவருடைய வார்த்தையை ருசுப்படுத்துவது போலிருக்கிறது. மேற்கண்ட அட்டவணையைக் கவனிக்கையில் சுருதி ஸ்தானங்கள் என்று மற்றவர் சொல்லும் இந்த 158 ஸ்தானங்களில் ஒன்றாவது கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் சுரங்களுக்கு சரியானதல்ல. கர்நாடக சங்கீத முறைமையில் வரும் கணக்கோடு ஒத்துப் பார்ப்பதால் உண்மை விளங்கும்.
|