நாடு ஒரு குழந்தை. குழந்தையைக் காக்க வேண்டும் என்று கருதி அறிஞரும் தொண்டரும் கூடி ஒரு பசு வாங்கினார்கள். கட்சி அமைப்பே அந்தப் பசு. பசு நன்றாகச் செழிக்க வேண்டுமென்ற எண்ணம் வளர, வளர அகத்திக் கீரை வாங்கி ஊட்டுவதிலும் பருத்திக் கொட்டையை அரைத்துக் கொடுப்பதிலும் மற்றப் பாங்கான வளர்ச்சியிலுமே காலமும் காசும் செலவாயின. பசு வளர்ந்து செழித்தது மட்டும் அல்ல; கொழுத்தது. குழந்தையை மெல்ல மெல்ல மறந்துவரத் தலைப்பட்டார்கள். "பசு வளர்ந்து செழித்த பிறகு குழந்தையைக் காப்பாற்றி விடலாம், கொஞ்சம் பொறுங்கள்", என்றார்கள். இதைக் கேட்டுக் கவலை கொண்ட சிலர் வேறொரு பசு வாங்கினார்கள். ஆனால் குழந்தையோ அந்தக் கட்சியாரின் கையில் சிக்குண்டு இருந்தது. அதனால் பாலூட்ட உரிமை இல்லை. ஆகையால் கவலை ஆத்திரமாக வளர்ந்தது. அந்தப் பசுவை இந்தப் பசுவைக் கொண்டு தாக்கிக் கொல்ல முற்பட்டார்கள். இந்தப் பசுவையும் கொழுக்க வைத்தார்கள். பசுச்சண்டை முற்றியது. குழந்தை அப்படியே இருந்தது. இது தான் உலகம் அறிந்த கட்சிக் கதை. தேவையும் பொறுப்பும் ஒரு நாடு வாழவேண்டுமானால் உணவு வளம் வேண்டும். கைத்தொழில் வளம் வேண்டும், ஆட்சியுரிமை வேண்டும். பழங்காலத்தில் ஒவ்வொரு சிறிய ஊரிலும் அந்த ஊருக்கு வேண்டிய உணவு இருந்தது; அந்த ஊருக்கு வேண்டிய பொருள்களைச் செய்யக்கூடிய குடிசைக் கைத்தொழில்கள் இருந்தன; அந்த ஊரை |