வந்து நின்று மற்றொரு கட்சி அதற்கு நிகராக வளர்ந்து விடலாம்; அறத்தை மறந்து விடலாம். நன்மை செய்யாமலிருக்கலாம்; ஆனால் கட்சியை வலுப்படுத்திவிடலாம். பெரிய கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சி மிக எளிதில் அதற்கு நிகரான பெரிய கட்சி ஆகிவிடும். இதுவும் உலகெங்கும் காணப்படும் உண்மையே. ஆகவே ஒரு கட்சி அமைத்தபோது மற்றொரு கட்சிக்கும் நிகரான இடம் கொடுத்து வளர்க்கும் வேலையைத் தம்மை அறியாமல் செய்துவிடுகின்றார்கள்; ஆக்க வேலையால் தாம் உயர்ந்தால், அழிவு வேலையால் அவர்கள் உயர இடம் கொடுக்கின்றார்கள். நல்ல வழியால் தாம் உயர்ந்தால், பொல்லாத வழியால் அவர்கள் உயர இடம் கொடுக்கின்றார்கள். தன் வயலைச் சுற்றி வேலி அமைக்கின்ற ஒருவன் தன்னை அறியாமல் தன்னை அடுத்த மாற்றான் வயலுக்கும் அதே வேலி பயன்படச் செய்கின்றான் அல்லவா? நம் தோட்டத்திற்கும் அரண் செய்யும் சுவராக அமைகின்றது அல்லவா? நமக்கு நன்மை என்று தன்னலத்தால் எழுப்பினோம். நம்மைப் பிரிப்பதற்கும் நம்மை எதிர்ப்பதற்கும் அது நம் எதிரிக்குப் பயன்படுகின்றது. இதுதான் அறத்தின் அருஞ்செயல். தன்னலத்தால் எவன் செய்யும் செயலும் அவனை அழிக்கவே திரும்பப் பயன்படுமாறு செய்கின்றது அறம். இவ்வாறு ஒரு கட்சியின் அமைப்பு முதலில் தான் வலுவடைகின்றது; பிறகு மற்றொரு கட்சி அமைப்புக்கு இடம் தருகின்றது; தான் உயர, உயர, தன்னை அறியாமல் அதையும் உயர்த்திவிடுகின்றது. அறம் மறைவதுபோல் இருந்து, இரண்டு கட்சியும் தாக்குண்டு அழியச் செய்கின்றது. இவ்வளவுக்கும் கட்சி வளர்த்த பகையுணர்ச்சி காரணமாக இருக்கின்றது என்பதை உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் காணலாம். |