| மூன்று ஆசையும் சேர்ந்து பணவேட்டையில் மனத்தை அலையச் செய்து, அறநாட்டத்தைப் புறக்கணிக்கச் செய்கின்றன. இந்தக் கருத்துகளையே வேறொரு வகையில் மற்றொரு சான்றோர் விளக்கியுள்ளார்; கடவுள், பணம் இந்த இரண்டையும் ஒரு சேர வழிபட முடியாது என்றார். கடவுளின் நெறியில் நிற்கவேண்டுமானால், பண வேட்டைக்கு ஆளாகக் கூடாது என்பதே அவர் கருத்து. 'ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையும்; முத்தி வாயிலில் செல்வர் நுழைய முடியாது' என்னும் கருத்தும் செல்வப் பற்று - பணவேட்டை - ஒருவரைக் கடவுள் நெறியிலிருந்து இழுத்துக் கெடுக்கவல்லது என்பதையே தெளிவிக்கின்றது. கடவுள் நெறி அறத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் பணவேட்டையை - பொருட்பற்றை - இவ்வாறு சான்றோர் கடிந்து கூறி வந்தார்கள். ஆனால், இந்தச் சான்றோர் செய்த முயற்சிகள் எல்லாம் தனிமனிதன் திருந்திச் சீர்படுவதைப் பற்றியதே ஆகும். தனித்தனியாக மக்கள் சீர்பட்டுவிட்டால் சமுதாயம் சீர்படும். உலகம் திருந்தும் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்கள் வாழ்ந்த உலகமும் அவ்வாறே அமைந்திருந்தது. ஒரு குடும்பத்தார்க்கும் மற்றொரு குடும்பத்தார்க்கும் ஓரளவான தொடர்பே இருந்தது. ஓர் ஊரில் இருந்த ஒருவர்க்கும் மற்றோர் ஊரில் இருந்த இன்னொருவர்க்கும் இருந்த தொடர்பு குறைவாகவே இருந்தது. ஒரு நாட்டு மக்களுக்கும் மற்றொரு நாட்டு மக்களுக்கும் தொடர்பு அதை விடக் குறைவாக இருந்தது. தொடர்பே இல்லை என்று கூறத்தக்க நிலைமை இருந்தது; இன்றைக்கோ, உலகமே |