பொருளாதார அமைப்பை மாற்றி அமைத்து மக்கள் எல்லோரையும் உயர்த்துவதா? முன்னது வெற்றிபெற வேண்டுமானால் வாணிகப் பெருக்கம், கைத்தொழிற்சாலை வளர்ச்சி இவை உலகமெல்லாம் போற்றப்படாமல் கைவிடப்படவேண்டும். போக்குவரவுக் கருவிகள் குறைய வேண்டும்; பழங்காலத்தைப் போல் கிராமங்கள் பெருக வேண்டும்; நகரங்கள் தேய வேண்டும். இவை நடக்கக் கூடியனவாகத் தோன்றவில்லை. ஒரு சிறந்த காரணத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். மக்கள் உடலுழைப்பைக் குறைத்துக் குறைத்து மென்மையாக வளர்ந்து வளர்ந்து அறிவை வளர்த்து ஓய்வைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட பின் பழைய நிலையை விரும்பிப் பின்செல்வார்களா? புகை வண்டியில் ஏறி எளிதில் விரைவில் பயணம் செய்வதை விட்டுக் காலாலேயே நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து செல்ல முன் வருவார்களா? ஒரு சிலர் நடந்துசென்று வலியத் துன்பத்தை ஏற்கலாம். அதனால் பொது மக்களின் வாழ்க்கையில் ஏதாவது மாறுதல் ஏற்படுத்த முடியுமா? ஒரு நாடோ அல்லது ஓர் இனமோ இவ்வாறு பழைய வாழ்க்கைக்குத் திரும்பலாம்; அதனால் பயன் விளையுமா? மாறாக மற்ற நாடுகளின் செல்வாக்காலும் மற்ற இனங்களின் எழுச்சியாலும் நசுக்குண்டு தாழ்வுற வேண்டிவரும். அறத்தின் நிலைமை மிகப் பழங்காலத்தில் பொருள் சேர்த்து வைக்கும் வழக்கமே ஒரு சிலரிடத்தில் மட்டும் ஒரு சில காலங்களில் மட்டும் தொடங்கியது. |