அப்போது பெரும்பாலோர் வாழ்க்கைப் பறவைகளின் வாழ்க்கைப்போல் இருந்தது. களஞ்சியங்களில் சேர்த்து வைக்காமல், அந்தந்த வேளை உணவுக்கு அவ்வப்போது தேடி உண்ணும் பழக்கம் இருந்தது. அன்றாட உணவைப்பற்றிய கவலை அன்றன்றைக்கே தீர்ந்தது. அந்த நிலையில் பொருள் ஆசை எது? அறத்தை அறிவுறுத்தும் காரணமும் ஏது? அதற்கு அடுத்தபடி, பயிரிட்டு அறுவடை செய்து களஞ்சியங்களில் சேர்த்து வைத்த நிலை. அப்போது அந்தந்த ஆண்டுக்கு உரிய உணவைப் பற்றி உழவர்கள் கவலைப்பட்டார்கள். உழவர்கள் தவிர மற்ற மக்கள் உழவர்களின் உதவியை எதிர்பார்த்துக் கவலை இல்லாமல் காலங் கழித்தார்கள். 'பழுமரம் தேடும் பறவைபோல்' கலைஞர்கள் வள்ளல்களை நாடி அவர்களின் உதவியைப் பெற்று மகிழ்ந்த காலம் அது. வெவ்வேறு தொழிலாளிகளும் உழவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்துவிட்டு உழவர்களின் களஞ்சியங்களை நம்பிக் கவலை இல்லாமல் காலம் கழித்த நிலை அது. அந்த நிலையிலும் பணவேட்டை இல்லை; ஆனால், ஒரு சாராரிடம் உணவுப்பொருள் சேர்ந்து நின்றபடியால், மற்றவர்கள் அதை நம்பி வாழ்ந்த படியால், அறத்தைப் பற்றிய உணர்வு வேண்டியிருந்தது. விருந்தோம்பல், அன்புடைமை, ஈகை முதலியவை அறப்பகுதிகளாக வற்புறுத்தப்பட்டன. 'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி 'வேளாண்மை செய்தற் பொருட்டு' என அறவுரை கூறப்பட்டது . அதற்கு அடுத்தபடி ஓர் ஊர்க்கும் மற்றோர் ஊர்க்கும் உறவும் தொடர்பும் மிகுந்த காலத்தில் வாணிகம் மெல்ல மெல்லத் |