தலையெடுத்தது. ஒரு பொருள் கொடுத்து மற்றொரு பொருள் வாங்கும் பண்டமாற்று வளர்ந்தது. பண்டம் இல்லாதபோது விலை மதிப்புள்ள பொன் வெள்ளி முதலியவற்றைக் கொடுத்து உணவுப் பொருளைப் பெறும் வழக்கமும் தோன்றியது. அவ்வாறு பண்டமாற்றும் காசு வாணிகமும் வேரூன்றிய பிறகு, பொய்யும் ஏமாற்றமும் புகுந்தன. காசு சேர்த்து வைத்தால் கவலையின்றி வாழலாம் என்னும் நம்பிக்கை வளர்ந்தபின் சேர்த்து வைக்கும் பணவேட்டை மெல்லத் தலையெடுத்தது. சேர்த்து வைத்த பொன்னுக்கும் வெள்ளிக்கும் காவல் வேண்டுமாகையால், படையும் போர்முறையும் அமைந்தன. வலியார் நன்றாக வாழ வகையும் மெலியார் அடங்கி நிற்க வழியும் தோன்றின. இவையெல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்று வளர்ந்தமைந்த பிறகு, அறம் படிப்படியாக மறையும்போல் தோன்றியது. பண்டமாற்றில் தொடங்கிக் காசு வாணிகத்தில் அரும்பிய பணவேட்டை வலியார் மெலியாரை அடக்கும் அடக்குமுறையில் முடியவே, பொய் ஏமாற்று முதலியன வாழ்வு பெற்றன. அருள் நெஞ்சம் பெற்ற சான்றோர்கள் இவற்றை எல்லாம் கடிந்து கூறி அறநெறியில் வந்த பொருளே வாழ்க்கைக்கு உதவும், மற்றவை உதவாமல் அழியும் என்று எடுத்துக்கூறி அறத்தை வற்புறுத்தினார்கள். திருவள்ளுவரின் அறத்துப்பால் முழுவதும் இத்தகைய சமுதாயத்தை நோக்கி எழுதப்பட்ட அறிவுரைகளே ஆகும். இன்று உள்ள அமைப்பில் பண்டமாற்று ஒரு மூலையில் ஒடுங்கியது. காசு வாணிகம் அளவில்லாமல் பெருகியது. யந்திர நாகரிகம் பெருந்துணை செய்து, பெரிய பெரிய கைத்தொழிற்சாலைகளையும் பெரிய வாணிக நிலையங்களையும் |