அவற்றிற்குக் காவலாக அழியாத நிதி நிலையங்களையும், அவை அழியாதபடி காக்க அவற்றைத் தாங்கி நிற்கும் அரசியல் கட்சிகளையும், பொருளாதாரத் திட்டங்களையும், அனைத்தையும் காக்கப் பெரிய பெரிய தரைப்படை, விமானப்படை, கடற்படை முதலிய படைகளையும், இந்தப் படைகளைக் கொண்டு அழிவுவேலை ஆற்றலுடன் நடைபெறுமாறு வெடிகுண்டு, நச்சுப் புகை, அணுக்குண்டு முதலிய போர்க் கருவிகளையும் கண்டு அமைத்துள்ளது. பணவேட்டைக்குச் செல்வாக்கும் அரசியல் தலைமையும் தற்காப்பு வன்மையும் வாய்த்துள்ளன. இவற்றிற்கு இடையில் அறநாட்டம் எங்கோ ஒரு மூலையில் பழங்காலத்துப் பண்டமாற்றுப்போல் ஒடுங்கி நிற்கின்றது. அறம் - பணம் : போர் ஆனாலும் அறம் வெல்லும்; பணம் தோற்கும். இந்த வெற்றியும் தோல்வியும் வந்தே தீரும். வெற்றி தோல்வி காண்பதற்கு உரிய போர்க்களம் இன்று வரையில் அமையவில்லை; இப்போதுதான் அமைந்துள்ளது. அவ்வாறு அமைந்திருப்பதைப் பல துறையிலும் விழிப்புடன் காண வல்லவர்களுக்கு உண்மை விளங்கும். முதலாவதாக, குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். இன்று குடும்பத் தளவில் காதல் வாழ்க்கை நடத்தும் கணவன் மனைவி இருவர்க்கும் பிணக்கோ பூசலோ பிரிவோ முறிவோ நேர்ந்தால், அவை பெரும்பாலும் பணத்தை அடிப்படைக் காரணமாகக் கொண்டிருப்பதை உணரலாம். காதலே இல்லாத ஆணும் பெண்ணும் பணம் கிடைப்பதே |