காரணமாகக் கணவனும் மனைவியுமாக வாழ்க்கை நடத்துவதையும், பணம் கிடைக்கும் நெறியில் முட்டுப்பாடு நேர்ந்தால் உடனே பிரிவும் முறிவும் செய்தலையும் காணலாம். தாய் தந்தையர்க்கும் மக்களுக்கும் நடக்கும் பூசல்களுக்கும் பணமே பெரும்பாலும் அடிப்படையாக இருப்பதைக் காணலாம். உடன்பிறந்தார் தம் உறவையும் கடமையையும் மறந்து செய்யும் பூசல்களுக்கும் வழக்குகளுக்கும் அடிப்படையில் பணமே காரணமாக விளங்குவதைக் காணலாம். பணம் உள்ள இடத்தில் சுற்றமும் நட்பும் பெருகுதலும் இல்லாத இடத்தில் சுருங்குதலும் காணலாம். ஆகவே அறம் ஒரு பக்கம் நிற்க, பணம் பல்வேறு வடிவம் எடுத்துக் குடும்பத்தளவில் போர் தொடங்கி இருக்கின்றது. அறத்தின் கோயில்களாக விளங்க வேண்டிய இல்வாழ்க்கை, காதல், ஆண் - பெண்-உறவு, பெற்றோர்-மக்கள்-அன்பு, உடன் பிறந்தார், கடமை, சுற்றத்தார் தொடர்பு, நட்பு என்பவைகளின் இடத்தையெல்லாம் பணம் கைப்பற்றிக் கொண்டிருக்கும் போது, அமைதி இருக்க முடியுமோ? ஏழைப்பெண் செல்வமுள்ள ஆணைக் காதலிக்க முடியவில்லை. வறியவனான ஆண் செல்வக் குடும்பத்துப் பெண்ணை விரும்புவதற்கும் இடம் இல்லை. இவ்வாறு காதலிலும் திருமணத்திலும் இல்வாழ்க்கையிலும் பணமுள்ள இடமும் பணமில்லா இடமுமாகத் தெளிவான பிரிவுகள் ஏற்பட்டுவிட்டன. ஏழைகளுக்கு ஏழைகளே சுற்றத்தாராக அமைவதும் நண்பராக அமைவதும், செல்வர்க்குச் செல்வரே அமைவதும் காணலாம். ஆகவே, நட்பிலும் சுற்றத்திலும் பணம் காரணமாகத் தெளிவான பிரிவுகள் ஏற்பட்டுவிட்டன. |