வேண்டுமானால், பறவையும் விலங்கும்போல் உணவும் உறையுளும் பெறவழி இல்லாமல் சாவதைத் தடுக்க வேண்டுமானால், வறுமை தொலையவேண்டும். இன்றைய நிலைமையில் செல்வர்க்கே நல்ல வாய்ப்புகள் வாழ்க்கையில் அமைந்திருக்கின்றன. வெட்ட வெளியைப் பரப்பாகத் தேடி நாற்புறமும் சுற்றுச்சுவர் எழுப்பிப் பலவகைப் பூஞ்செடிகளும் பூங்கொடிகளும் வளர்த்து இடைநடுவே உயர்ந்த பெரிய மாளிகையை வனப்புற வகுத்து அதனுள் இருவர் மூவராக வாழும் வாழ்க்கை செல்வர்க்கே அமைந்திருக்கின்றது. இப்படிப்பட்ட பெரிய வீடுகளில் குடியிருக்கப் போதிய மக்களும் இல்லை. ஆனால் இவற்றை அடுத்து உள்ள குடிசைகளில் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? ஒவ்வொரு சிறு குடிசையிலும் காற்றும் ஒளியும் புகுவது அருமைதான். குடிசைக்குப் பத்துப் பதினைந்து இருபது முப்பது மனித உடம்புகள் அடைபட்டு நெருங்கி வாழ வேண்டும். தூய காற்றும் நல்ல நீரும் இல்லாமல் வருந்த வேண்டும். பரந்த வெளியில் பூந்தோட்டத்திற்கு நடுவே பெரிய வீடுகளில் இருவர் மூவராகக் கொழுமையான உணவு உண்டு புரண்டு கொண்டிருக்கும் காட்சி ஒரு பக்கம்; சாய்க்கடையும் நீர்த்தேக்கமும் குப்பைகளும் சூழும் சூழல்களுக்கிடையே சிறு குடிசைகளில் பதினைந்து இருபது பேராக எளிய அரைவயிற்றுக் கஞ்சி குடித்து இரவும் பகலும் உழன்று கொண்டிருக்கும் காட்சி மற்றொரு பக்கம். பூந்தோட்டமும் பொலிவான வீடும் எவர் உழைப்பால் அமைந்தனவோ, அவர்களுக்கு நல்ல குடிசையும் இல்லை; சாய்க்கடை நாற்றத்தையும் குப்பைகளின் தீமையையும் போக்க வழியும் இல்லை. கொழுமையான உணவும் ஆடம்பரப் பொருள்களும் எவர் வியர்வையால் |