காலம் வருகின்றது. "அதோ போகின்றாரே அவருக்குப் பொய் என்றால் பிடிக்காதாம். கள் என்றால் கசப்பாம்; அடித்தால் கன்னத்தில் வாங்கிப் போட்டுக்கொள்ளும் கோழை; கட்டிய மனைவியையும் சரியாகப் பார்க்கத் தெரியாத பேதை", என்றெல்லாம் ஒழுக்கம் உடையவர்கள் இகழப்படும் காலம் வருகின்றது. எதனால் உயர்வு பெற்றார்களோ அதனாலேயே இகழ்ச்சி நேர்கின்றது. அதுமட்டும் அல்லாமல், அவர்களுடைய வயிற்றில் பிறந்த மக்களே ஒழுக்கமற்ற இளைஞருடன் சேர்ந்து ஒழுக்கத்தைப் பழித்து வாழ்வதையும் காண நேர்கின்றது. புறத்தில் இருந்த மாறுபாடும் பகையும் அகத்திலும் புகுந்து அச்சுறுத்துகின்றன. ஒழுக்கமுடையவர்களில் ஒரு சிலர் நல்ல நோக்கம் கொண்டு மற்றவர்களிடம் வெறுப்புக் காட்டாமல் அன்பு காட்டித் தொண்டு செய்யவும் முயல்வார்கள்; அவர்களும் இந்தப் பகைக்கும் பொல்லாப்புக்கும் ஆளாக நேர்கின்றது. என்ன செய்வார்கள், பாவம்! இனம் செய்த தீவினை! எளிதில் விடுமா? உடல்நலமும் ஒருவகைச் செல்வமே ஆகும். அது பொருள்வளம் உடையவர்களுக்கே எளிதில் அமைவதாகும். காட்டில் எந்தப் பறவையும் எந்த விலங்கும் உணவு இல்லாமல் உடல் அழிந்து சாவதில்லை; இருக்குமிடம் இல்லாமல் வருந்திச் சாவதில்லை. ஆனால் மனித உடம்பு எடுத்தவர்களில் எத்தனையோ பேர் உணவு இல்லாமல் உடல் அழிந்து செத்திருக்கின்றார்கள்; செத்து வருகின்றார்கள். எத்தனையோ ஏழைமக்கள் குடியிருக்க நல்ல வீடு கிடைக்காமல், தெருச்சாய்க்கடை ஓரங்களிலும் நெருக்கமான குப்பங்களிலும் வாழமுடியாமல் வாழ்ந்து தொத்துநோய் பரவிச் சாகின்றார்கள். இவர்கள் நல்லபடி வாழ |