தலைவன் அல்லவா? ஆகவே, வாய்ப்புக் கிடைத்தபோது அறியாத மக்களை மட்டும் அல்ல, அறிஞர்களையும் ஆளத் தொடங்குகின்றான். அறிஞர்கள் அப்போது என்ன செய்கின்றார்கள்? தாம் சிறுபான்மையோர் என்பதை உணர்ந்து வருந்துகின்றார்கள்; அவனுடைய ஆட்சிக்குக் கீழ்ப்படிந்து வாய் திறக்காமல் பணிசெய்யத் தொடங்குகின்றார்கள். எழுதுகோல், துப்பாக்கி முனைக்கு அஞ்சி அடங்கி வணக்கம் செலுத்தும் கதை இது. "கற்றவர்கள் கல்லாதவன் கீழ் வணங்கித் தொழில் செய்து வயிறு வளர்க்க வேண்டுமா? தலைவிதிதான்" என்று அப்போதுதான் முணுமுணுக்கின்றார்கள். ஆனால், ஊழ் யாரைவிடும்? அறிவில்லாப் பொதுமக்களை உயர்த்த முயலாமல், அவர்களுக்குத் தம்முடைய அறிவுச் செல்வத்தை வழங்காமல் தனியே ஒதுங்கி வாழ்ந்த தீவினையே இவ்வாறு விளைகின்றது. அறிஞர்களில் நல்லவர் ஒருவர் இருவர் இருந்து பொதுமக்களிடம் அன்புகொண்டு தொண்டு செய்கின்றார்கள். அவர்களையும் இந்த ஊழ்விடாமல் துன்புறுத்துகின்றது. ஒழுக்கச் செல்வம் உடையவர்களும் ஓர் இனமாக வாழ்ந்து மற்றவர்களைப் புறக்கணித்தால் தீமையே விளைகின்றது. ஒழுக்க மில்லாதவர்கள் சில காலம் ஒதுங்கி வாழ்ந்து வருகின்றார்கள்; காலப்போக்கில் அவர்களிடையே அச்சமற்ற முரடர்கள் பிறக்கின்றார்கள்; ஆளும் வகை தேடுகின்றார்கள்; வல்லமை திரட்டித் தலைமையும் பெறுகின்றார்கள். அப்படிப்பட்ட தலைவர்கள் செல்வாக்குப் பெறும்போது, அவர்களின் ஆட்சியின்கீழ் ஒழுக்கம் எள்ளப்படுகின்றது; இகழ்ந்து தள்ளப்படுகின்றது. போற்றப்படும் ஒழுக்கம் அஞ்சி அடங்கும் |