பக்கம் எண் :

அறத்தின் ஆட்சி 89

அழிவுகளை உண்டாக்கிய உண்மையை வரலாறுகளில் படிக்கின்றோம். தனி
மனிதனின் வாழ்க்கை எல்லை வரையறுக்கப்பட்டு விளங்கும் இந்தக்காலத்தில்
அத்தகைய அழிவுகள் நேராமல் காக்க வேண்டும். இப்படி மான உணர்ச்சியை
இடத்திற்கு ஏற்றவாறு அமைத்துக்கொண்டு பொது நோக்கம் வளர்க்கின்ற
நாடுகள் முன்னேற்றம் அடைவதையும், மான உணர்ச்சியை இடவரையறை
இல்லாமல் போற்றும் நாடுகள் பிற்போக்கு அடைவதையும் இன்று காணலாம்.
நாட்டுத் தொண்டில் ஈடுபட்டபோது, நான் இன்ன குடும்பத்தான் இன்னான்
என்னும் சிறு எல்லைகளையும் அவை பற்றிய மான உணர்ச்சிகளையும்
நினைக்காமல் தொண்டு செய்யும் நாகரிகம் வேண்டும்; இந்த நாட்டு மக்களுள்
ஒருவன் என்ற நாட்டு மானம் பற்றிய எண்ணத்தோடு தொண்டு செய்யும்
பண்பாடு வேண்டும். அப்படிச் செய்தால் தன் சொந்தப் பகைவரையும்
குடும்பப் பகைவரையும் நாட்டுத் தொண்டு காரணமாகக் காணும்போது
பகையுணர்ச்சி வளராமல் அன்புணர்வு வளரும். அதுபோலவே, குடும்பக்
கடமை மேற்கொண்ட போது தனி மான உணர்ச்சியை விட்டுக் கடமையைச்
செய்து பழகினால் குடும்பம் முன்னேறும். இந்தப் பண்பாடு வந்தால்தான்
கருத்து வேற்றுமைக்கு மதிப்புத் தர மனம் வரும்; கருத்து வேற்றுமைக்கு
இடையே பலரும் ஒற்றுமைப்பட்டு நாட்டின் பொதுக்கடமையைச் செய்யும்
பழக்கம் வரும். இல்லையானால், குடும்பங்களில் இரண்டு மூன்று பிரிவு,
ஊர்களில் நாலைந்து பிளவு, நாட்டில் ஏழெட்டுக் கட்சி, அந்தக்
கட்சிகளுக்குள் பத்துப் பதினைந்து உட்பிரிவுகள், அந்த உட்பிரிவுகளில்
உள்ளவர்களும் நெல்லிக்காய் மூட்டைபோல் ஒட்டாமல் உதிர்ந்து சிதறும்
சிறுமை எல்லாம் வாழும். நாட்டின் நன்மையைக் கருதுகின்ற நோக்கம்
எல்லோருக்கும்