அதுபோலவே, கருத்து வகைகளிலும், பெரும்பான்மையானவர்களின் விருப்பம் நிறைவேறட்டும் என்று பொறுமை கொள்கின்றவனே உண்மையான நாட்டுத் தொண்டன். "என் கொள்கையை ஆதரிக்காமல் கைவிட்டார்களே. ஆகையால் இனிமேல் இந்தக் கூட்டத்திலேயே சேரமாட்டேன்", என்று எண்ணித் துணிகின்றவன் நாட்டின் பொது வாழ்க்கையில் ஈடுபடத் தகுதியற்றவன். அவனுக்கு வாக்குரிமை இருப்பது குடியாட்சி முறைக்கு ஓர் இடையூறு இருப்பதாகவே கொள்ளப்படும். அதற்கு மாறாக, "என் கொள்கைக்கு இந்தக் கூட்டத்தில் இடம் இல்லை. எல்லோரும் கைவிட்டார்கள். என் தீர்மானம் தோற்றது. ஆனாலும் செயலாளன் என்னும் பொறுப்பு என்னிடம் இருக்கின்றது. ஆகையால் அவர்கள் விரும்பிய அந்தச் செயலை நடத்தி வைப்பதே என் கடமை. என் சொந்த விருப்பத்தைச் சொன்னேன். சொல்லும் கடமை முடிந்தது. இனி அடுத்த கடமை அவர்கள் விரும்பிய போது வேலையைச் செய்வதே", என்று எண்ணித் துணிகின்றவனே பெருந்தன்மை உடையவன்; அவனே நாட்டைக் காக்க வல்ல வீரன். சமயத் துறையில் பல சமயத்தாரும் கூடிவாழ்கின்ற பொது வாழ்க்கையில் தனிச் சமயக்குறிகளை மேற்கொண்டு வேறுபாட்டை வளர்க்காமல், தன் சமயத்தார் கூடியுள்ள இடங்களில் மட்டுமே அவற்றைப் பாராட்டுகின்றவன் அறவோன்; பொது வாழ்க்கையில் பொது முறைகளையே பாராட்டுதல் அறம் உணர்ந்தவன் கடமை. காரணமில்லாமல் பொது வாழ்க்கையில் தனிவாழ்க்கையை நுழைத்து வேற்றுமை உணர்ச்சியை வளர்ப்பது பாவம் என்றும், கடவுளுணர்வுக்கு மாறானது என்றும் தெளிய வேண்டும். |