பக்கம் எண் :

கட்சி அரசியல் 97

கடமையும் உரிமையும்

     கடமையை ஒட்டியே இந்த உணர்வு பிறக்கும், வீட்டுக் கடமையை
நினைக்கும்போது மகன் கணவன் தந்தை என்ற எண்ணங்கள் வருவது போல்,
உலகக்கடமையை நினைக்கும்போது அருள் உணர்வு நெஞ்சில் நிலைக்கும்.
இப்படிப் பரந்த நோக்கங்கொண்டு நினைப்பவர்கள் பெருகினால் உலகம்
சீர்ப்படும். ஆனால் பெரும்பாலோர் இவ்வாறு நினைக்காமலிருப்பதற்குக்
காரணம் பண வேட்டையே என்பதைக் கண்டோம். பண வேட்டையை ஒரு
பக்கம் வைத்துக் கடமைப் பற்றோடு உணர வல்லவர்களுக்கும் இது ஓரளவு
வெற்றி தரும். ஒரு கழகத்தின் செயலாளராக இருப்பவர் தாம் இன்னார்
என்று தம் பெயரையும் பெருமையையும், நினைக்காமல், கழகக் கடமையைப்
பொறுத்தவரையில் கழகத்தைச் சார்ந்த ஒருவன் என்று எண்ணுவாரானால்,
தம் கடமையை நன்றாகச் செய்ய முடியும். தனி ஒருவராகிய தம்முடைய
விருப்பு வெறுப்பைத் தம்மோடு நிறுத்திக்கொண்டு கழகத்தில் நுழைக்காமல்
காத்துக் கொள்வாரானால், அந்தக் கழகம் முன்னேறுவது திண்ணம்.
இப்படியே பரந்த நோக்கத்தோடு தம்மை மறந்து நாட்டுக் கடமையைச்
செய்வாரானால் நாடு முன்னேறும், உலக முன்னேற்றத்திற்கு இதுவே வழி.
இவ்வாறு வரவரத் தனி உணர்வு குறைந்து குறைந்து உலக உணர்வு
பெருகுமாறு போற்ற வேண்டும். பழங்காலத்தில் மக்கள் வாழ்க்கை
தனித்தனியாகப் போற்றப்படும் வாழை, தென்னை முதலிய மரங்களைப்
போல இருந்தது. இன்றோ தோட்டமாகவும் தோப்பாகவும் போற்றப்படும்
வாழை, தென்னை முதலியவை போல இருக்கின்றது. ஆனால், தனி
வளர்ச்சிக்கே வாய்ப்பு இல்லையோ என்று கேட்கலாம்.