பக்கம் எண் :

96அறமும் அரசியலும்

நிற்கும்போது இத்தனை உறவும் நினைவில் உறுத்தாமல், இன்ன
அரசனுக்காகப் போர் செய்ய வந்த வீரன் என்ற உணர்வு ஒன்றே நிலைக்கும்.
இவ்வளவு மாறுதலும் பழங்காலத்து மக்களுக்குத் தெரிந்தவைகளே. இவ்வாறு
மாறி உணர்ந்தால்தான் வாழ்க்கை உண்டு என்பது அந்தக் காலத்து
மக்களுக்குத் தெரியும். இப்போது இன்னும் இரண்டு படிகள் ஏறி உணர
வேண்டும்; நான் இன்ன நாட்டு மனிதன் என்ற உணர்வு வேண்டும்;
அதைவிடச் சிறப்பாக நான் உலகத்து மக்களுள் ஒருவன் என்ற உணர்வு
வேண்டும். இவ்வாறு உணரும் உணர்வே இன்று மிகுதியாகத் தேவை. உலகம்
பிணைந்து குடும்பமாக வாழும் வாழ்க்கை மிகுதியாகி வருவதே இதன்
தேவைக்குக் காரணமாகும்.

     இந்த நல்ல உணர்வு தலையெடுத்து மக்கள் வாழ்வார்களானால், உலகம்
விரைவில் முன்னேறிவிடும். அறத்தின் அடிப்படையாக அன்பு வேண்டும்
என்றும், அதற்காகவே இல்லறமும் விருந்தோம்பலும் அறத்தின் பகுதிகளாகக்
கூறப்பட்டன என்றும், இந்த அன்பே வளர்ந்து வளர்ந்து எங்கும் பரந்து
பாயும் அருளாக மாறுவது என்றும் திருக்குறள் தெளிவுபடுத்துகின்றது
அல்லவா? தனி ஒருவன் என்ற தாழ்நிலையான உணர்வு மாறி மாறி உயர்
நிலையான அருளுணர்வு பிறக்க வேண்டும் என்பதே பெரியோர்களின்
கருத்து.