பள்ளிக்கூடத்தின் ஆண்டுவிழா ஐந்து ரூபாய்ச் செலவில் நடக்கும்; அதற்கு வருவோர் கூட்டமும் ஐம்பதிற்கு மேல் இருக்காது. ஓர் ஊரில் ஒரு திருமணத்திற்கு ஆயிரக்கணக்காகச் சேர்வதைக் காணலாம். ஆனால் ஊர் விழாவிற்கோ, அல்லது நாட்டுக்குப் பொதுவான ஒரு நல்ல செயலுக்கோ, ஐந்து அல்லது பத்துப் பேரும் ஊக்கம் கொள்வதில்லை. தனி வாழ்க்கையில் ஆர்வம் குறைய வேண்டும்; பொது வாழ்க்கையில் ஊக்கம் மிக வேண்டும். 'நான் இன்னான்' என்பதை மறந்து தன்னலம் இல்லாமல் நடப்பது புதிய முறை அல்ல. குடும்ப வாழ்க்கை வளர்ச்சியுற்ற அந்தப் பழங்காலத்திலும் ஓரளவு பழக்கம் இந்தத் துறையில் இருந்து வந்தது. தனியே இருக்கும்போது, ஒருவன் தன் பெயரையும் பெருமை சிறுமைகளையும் எண்ண முடியும். ஆனால் தன் பெற்றோரை அணுகிப் பேசும்போது, அவர்களுடைய மகன் என்ற எண்ணம் தவிர, வேறு எண்ணம் தோன்றாது. தன் மனைவியோடு பேசும் போது, அவளுடைய துணை என்ற எண்ணம் தவிர, தன்னைப் பற்றி வேறு நினைவு இருக்காது; இன்னாருடைய மகன் என்ற உறவை மறந்து பேசுவதே அப்போது உள்ள நிலைமை. தன் குழந்தைகளோடு கொஞ்சும் போதோ, "நான் இன்னாருடைய மகன், இன்னவளுடைய கணவன்" என்பவை மறந்துபோகும்; இந்தக் குழந்தைகளின் அப்பா என்ற எண்ணம் ஒன்றே நிற்கும். ஊர்ப் பொதுக் கூட்டத்திலோ பொது விழாவிலோ கலந்து கொண்டிருக்கும்போது, மகன், கணவன், தந்தை என்ற நினைவு அத்தனையும் போய், இன்ன ஊரான் என்ற எண்ணமே நிற்கும். அரசனுடைய ஆணைப்படி படையில் சேர்ந்து சென்று போர்க்களத்தில் |