பக்கம் எண் :

280இலக்கியத் திறன்

Untitled Document

      தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
     என்குற்றம் ஆகும் இறைக்கு.1

     திருவள்ளுவர்     இவ்வாறு  வேறு துறைகளுக்குச்  சொன்ன
கருத்துகள்      இலக்கிய   ஆராய்ச்சித் துறைக்கும் பொருந்துவன
ஆகும்.   தம்   மனத்தின்  நடுநிலையற்ற தன்மையை- கோணலை-
உணராத   அறிஞர்   எவரும்,   இலக்கிய ஆராய்ச்சித் துறைக்குத்
தகுதி   உடையவர்    அல்லர்   என்று உணர்தல் வேண்டும். தம்
மனக்குற்றத்தைத்     தாமே   உணரும் ஆற்றல் பெற்று விட்டால்,
பிறருடைய   நூல்களைச்     சீர்தூக்குவதில்   நடுநிலைமை வந்து
அமையும்.   அத்தகையவர்கள்,    சமுதாயத்திற்கு நல்ல  தொண்டு
ஆற்ற   வல்லவர்கள்.    வாழ்விற்கு    வழிகாட்டுபவர்கள் போல்,
இலக்கியக் கல்விக்கு வழிகாட்டி  உதவ வல்லவர்கள்  அவர்கள்.

வழி காட்டுதல்

     கல்வியைப்  பற்றிச்  சொன்ன சான்றோர ், கற்கத் தக்கவற்றை
மட்டும்     கற்க   வேண்டும் என்றும், கசடறக்  கற்றல் வேண்டும்
என்றும்     இரண்டு    குறிப்புகள் கூறியுள்ளார்.2 தகாதவற்றைக்
கற்றுக்    காலத்தை   வீணாக்காதவாறு,     கற்கத்தக்கவை  இவை
என்று    எடுத்துரைக்க  வல்லவர்கள் இலக்கிய    ஆராய்ச்சியாளர்;
முறையின்றிக்    கற்றுப்   பயன்  பெறாமல் திகைக்காதவாறு   கசடு
அறும் வகையில்  இவ்விவ்வாறு கற்று   இன்னபயன் பெறுக  என்று
எடுத்துரைக்க     வல்லவர்களும்    அவர்களே,   ஆகவே,   இரு
வகையிலும்   வழிகாட்ட  வல்லவர்கள் அவர்களே.    இன்னவற்றை
உண்டு   உடலோம்புக  என்றும், இன்னஇன்ன  முறைப்படி  உண்டு
உணவின்     பயன்    பெறுக    என்றும்   கூறி உடலைக் காக்க
வழிகாட்டும்   உடல் நூலறிஞர் போல், இன்ன   நூல்களைக் கற்றுப்
பண்படுக     என்றும் இன்ன முறைப்படி கற்று   இன்புறுக என்றும்
கூறி       உள்ளத்தைக்    காக்க    வழிகாட்டுவோர்   இலக்கிய
ஆராய்ச்சியாளர்.     அறிஞர்  ரிச்சர்ட்ஸ் கருத்துப்படி,  மருத்துவர்
உடல் நலத்தில்     அக்கறை    கொண்டவராக   இருத்தல் போல்,
ஆராய்ச்சியாளர்    மன    நலத்தில்   அக்கறை   கொண்டவராக
இருத்தல்   வேண்டும்.   ஏன்   எனில், அவர் கூறும் முடிவுகள்


    1. திருக்குறள், 436
    2. திருக்குறள் 391', கற்க கசடறக் கற்பவை.'