1 செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு | உலகம் முழுவதும் நோக்கின், மொழியமைப்பு, மொழி வளர்ப்பு, மொழிக்காப்பு ஆகிய மூவகை மொழிவினையிலும் தலைசிறந்தவர் குமரிநிலத் தமிழரே என்பது, தெளிவாகின்றது. | வாய்ச்சோம்பலாலோ, தட்ப வெப்பநிலை பற்றிய நில வேறுபாட்டாலோ, இரண்டினாலுமோ, மொழி பொதுமக்கள் வாயில் திரிவதையும், அத் திரிபிற்கு எல்லையில்லாமையையும், கண்ட தமிழறிஞர், இயனிலைத் தமிழுக்குச் செந்தமிழ் என்றும், திரிநிலைத் தமிழுக்குக் கொடுந்தமிழ் என்றும் பெயரிட்டு, செந்தமிழையே உலகுள்ள அளவும் நிலையான அளவை மொழியாக்கி விட்டனர். நடைமொழி (dialect) யுண்மை பண்டைத் தமிழருக்குத் தெரியா தென்றும், வண்ணனை மொழிநூல் (descriptive linguistics) தோன்றிய பின்பே நடைமொழியாராய்ச்சி உலகெங்கும் பரவியதென்றும், மேலை யரும் அவரைச் சார்ந்த வையாபுரிகளும் கருதிக்கொண்டிருக்கின்றனர். தமிழர் "தம் மொழியைப் பிறமொழிகளுடன் மட்டுமன்றி, தம் சொந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிறமொழிகளுடன்கூட, ஒப்புநோக்க ஒருகாலும் முயன்றதில்லை. மொழிக் குடும்பம் என ஒன்று உண்டென்னும் கருத்தை, அவர்கள் என்றேனும் உட்கொண்டதில்லை," என்று கால்டு வெலாரும் எழுதிவிட்டார். ஆயின், அவர் காலத்தில் தொல்காப்பியப் பயிற்சியின்மையால், அவர் கூற்று மன்னிக்கத் தக்கதே. தமிழ் உலக முதன்மொழியா யிருத்தல்போன்று, மொழியாராய்ச்சியும் முதன்முதல் அம் மொழியிலேயே தோன்றிற் றென்பது கி.மு.7ஆம் நூற்றாண்டிலெழுந்த தொல்காப்பியம் என்னும் சார்பிற் சார்புநூலால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியம், வடசொல்லும் ஆரிய இலக்கியமும் ஆரியர் மரபும் தவிர, மற்றெல்லாவற்றையும் குமரி நாட்டு நிலைமை தழுவியே கூறுவதால், அக் காலத்தில் (அஃதாவது ஆரியர் வருமுன்) செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் பாகுபாடு தவிர, இற்றைத் திரவிட மொழிகள் கூடியது போன்ற ஒரு மொழிக்குடும்பம் தோன்றவில்லை என்பதையறிதல் வேண்டும். | மேலும், ஆரியர் வந்தபின் தமிழ்மொழி வளர்ச்சியும் மொழி யாராய்ச்சியும் தடுக்கப்பட்டுவிட்டதனால், கால்டுவெலார் குறைகூறல் வலியற்றதாகின்றது. | | |
|
|