| பெரும்பேராசிரியர் பண்டாரகர் (Dr.) உ.வே. சாமிநாதையர் பெருங்கதை முகவுரையிற் கூறியிருப்பது, கொங்குவேள் அவ் வனப்பை அல்லது தொடர்நிலைச்செய்யுளை இயற்றியபின் நேர்ந்துள்ள நிலைமையையே குறிப்பதாகும். இக்காலத்தும் இரசியாவைப்பற்றிக் கேள்விப்பட்ட தமிழருள் ஒருசிலர் தம் புதல்வர்க்குத் தாலின் (Stalin), லெனின் (Lenin) எனப் பெயர் இடுவதையும், அதுபற்றி அவரை இரசியர் எனக்கொள்ள இடமின்மையும், நோக்குக. | | இனி, இளங்கோசர் என்னும் வழக்கில் உள்ள 'இள' என்னும் அடைமொழிக்காரணம் பற்றி, பெரும்புலவர் ரா. இராகவையங்கார், | | | "வேட்டொழிவ தல்லால் வினைஞர் விளைவயலுள் தோட்ட கடைஞர் சுடுநந்து-மோட்டாமை வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை இன்புறுத்த வல்லமோ யாம்" | | ... ... ... ... இவ் வச்சத் தொள்ளாயிரப் பாட்டில் 'வச்சத்திளங் கோவை' எனப் பாடியதனால், இந் நாட்டுக் குடியேறியவன் வச்சத் திளங்கோ வேந்தன் வழியினன் என்று தெளியலாகும். இவன் கோசத்தினின்று இங்கு வந்தவன் வழியினனாதலால் இவன்வழிக் கோசரெல்லாம் இளங்கோசர் என்று வழங்கப்பட்டனரென உய்த்துணரலாம்" | | "இனி இக் கோசாம்பியை ஆண்ட அரசரே இளன் என்னும் திங்கட்குலத்து வேந்தன் வழியின ரென்றும், அதுபற்றியே அவன் வழிவேந்தர் இளங்கோ எனப் பெயர் சிறப்பரென்றும் கருதுவாருண்டு" | | "இனி, இவர் வத்ஸ தேசத்துக் கோசம் என்ற தலைநகரினின்று வந்தவராதலான், இளங்கோசர் என வழங்கப்பட்டனரெனின், அதுவும் நன்கு பொருந்தும். வத்ஸ மொழி ஆரியத்தில் இளமைக்குப் பெயராதலான் வத்ஸகோசர்-இளங்கோசர் என மொழிபெயர்த்துத் தமிழரால் வழங்கப் பட்டனரென்றுங் கொள்ளலாம். கோசரைக் கூறிய பலவிடத்தும் சான்றோ ரெல்லாம் பல்லிளங் கோசர், நல்லிளங்கோசர், கொங்கிளங்கோசர் என வழங்கிக் காட்டலான், இஃது உடலிளமைபற்றிய தாகாதென்பது ஒருதலை யாகத் துணியலாம். வத்ஸ தேசத்தை இளநாடெனக் கொண்டு அந்நாட்டு வேந்தனை இளங்கோவென்றும், அந்நாட்டுக் கோசரை இளங்கோசர் என்றும் வழங்கினரென்பது பொருந்தியதாம்." எனப் பலவாறு கூறியுள்ளார் (பக். 7, 8). பின்னர், அவரே, முன்னுக்குப்பின் முரணாக, "கோசர் எப்போதும் இளமையோடி யிருப்பரென்று துணிவது பொருந்தாதாம். "ஊர்முதுகோசர்" (அகம். 262) என வழங்கலான், இவர் எல்லா மக்களும் போன்று யாக்கை மூத்துக் கழிதலுண்டென்க. இதனால், இவரை இளங்கோசர் எனப் பல்லிடத்தும் வழங்குவது இவர் குடிபற்றியது அல்லது நாடுபற்றியதெனின், நன்கு பொருந்துமென்க." எனவுங் கூறியுள்ளார் (பக். 9). | | |
|
|