பக்கம் எண் :

கோசர் யார்?115

 

"பாசிலை யமன்ற பயறா புக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந் தருளா
தூர்முது கோசர் நவைத்த சிறுமையிற்
கலத்து முண்ணாள் வாலிது முடாஅள்
சினத்திற் கொண்ட படிவம் மாறாள்
மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர்
இன்னுயிர் செகுப்பக் கண்டுசின மாறிய
அன்னி மிஞிலி போல"

(262)

என்ற அகச்செய்யுளினின்று, "வாய்மொழித் தந்தை" என்றது ஊர்முது கோசரோடு ஒரே இனத்தவன் ஆன தந்தை என்பது புலப்படநின்றது. முதுகோசராயிருந்தும் இனமென்று நோக்காது, தண்டந் தகுதியன்றென்பதும் எண்ணாது, எல்லா வுறுப்பினுஞ் சிறந்த கண்ணை அருளாது களைந்தன ரென்றார்...........குறும்பியனுந் திதியனும் கோசரின மல்லராயின் இங்ஙனம் எளிதில் ஒன்றுமொழிக்கோசரைக் கொன்று முரண்போக்கலாகா தென்க. "முரண்போகிய" (அகம். 196) என்றதனால் ஓரினத்திற்குள் நேர்ந்த முரண்பாடு இஃதெனத் துணியலாம். ஊர்முதுகோசர் பிழையாதலால், இவ்வழக்கில் வேளிர் இடையிற்புக்குக் கொன்று முரண்போக்கல் இயலா தென்க. கோசர் அந்நியராற் கொல்லப்படத்தக்க எளியரல்லர் என்பதும் நினைக," எனத் தம் மனம்போனவாறெல்லாம் உய்த்துரைப்பர் பெரும் புலவர் ரா. இராக வையங்கார்.

     கோசர் மட்டுமன்றி உண்மை சொல்வோரெல்லாம் வாய்மொழிவாயர் எனப்படுவர். "வாய்மொழிவாயர் நின்புகழேத்த" என்று பதிற்றுப்பத்துள் வருதல் காண்க (37, 2). கோசர் பலவிடத்துப் பிறரால் வெல்லப்பட்டமை பண்டை இலக்கியத்தினின் தெரியவருதலால், "அந்நியராற் கொல்லப்படத் தக்க எளியரல்லர்" என்று கூறுவது பொருந்தாது, அவரெல்லாரும் அத்தகைய வலியரெனின், மூவேந்தர் அவர்முன் எங்ஙனம் நாடாண்டிருக்க முடியும்?
     இளையரே பொருதற்குச் சிறந்தவராதலாலும், 'இளையர், மழவர்' முதலிய இளமைகுறித்த பெயர்கள் போர்மறவர்க்குப் பழஞ்செய்யுட்களுள் வருவதாலும், இளைஞரான கோசரே, இளங்கோசர் என்னப்பட்டனரென்றும், அவருள் மூத்துப் போர்த் தொழிலினின்றும் நீங்கி இக்காலத்து ஓய்வுபெற்ற பொருநர் (ex-service men) போல் ஊர்க்குள் வதிந்தவரே "ஊர்முது கோசர்" என்னப்பட்டனர் என்றும், கொள்வதே மிகப்பொருத்தமாம்.
     கோசர் தமிழரே என்பது இதுகாறும் கூறியவற்றால் தெரிதலால், பழையன், அதகன், ஞிமிலி, அகுதை, திதியன், குறும்பியன், ஆதனெழினி, தழும்பன் முதலிய குறுநிலமன்னரும் படைத்தலைவரும் பொருநரும்