பக்கம் எண் :

116தமிழியற் கட்டுரைகள்

தமிழரே என்று தெளிக. அவர் பெயரெல்லாம் தூய தமிழ்ச்சொல்லா யிருத்தலையும், அவர் என்றேனும் வேற்றுமொழி பேசியதாக எங்கேனும் சொல்லப்படாமையும், நோக்குக.

     எத்தொழிலையும் இருவகுப்பார் செய்துவரின், அவர்க்குள் இகலும் இசலிப்பும் ஏற்படுவது இயல்பே. கோசர்க்கும் வேளிர்க்கும் போர்த்தொழில் ஓரளவு ஒத்திருந்தமையின், அவரிடைச் சிறிது பகைமை ஏற்பட்டிருக்கலாம். இதுபற்றிக் கோசரை வடநாட்டாரெனக் கொள்வது பொருந்தாது. ஆரிய வருகைக்குமுன் நாவலந்தேய முழுவதும் தமிழரும் அவர் வழியினரான திரவிடருமே குடியிருந்ததினால், வேளிரைப்போன்றே கோசரும் பனிமலை (இமயம்)வரை பரவியிருந்திருக்கலாம். ஆதலால், கோசம் என்னும் சூள்முறையை வடநாட்டார் கையாண்டமை, அதன் அயன்மையைக் காட்டாது.
     கோசர்க்கும் வேளிர்க்கும் போர்த்தொழில் ஓரளவு பொதுவாயிருந்த தேனும், அது கோசர்க்கே சிறந்திருந்தமை
  "இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர்"

(அகம். 90)

  "வளங்கெழு கோசர் விளங்குபடை"

(அகம். 205)

  "... ... ... ... ... ... ... ... ... ... வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலின ரெறிந்த அகலிலை முருக்கிற்
பெருமரக் கம்பம் போல"

(புறம். 169)

  "மெய்ம்மலி பெரும்பூட் கோசர்"

(அகம். 15)

  "கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்"

(மதுரைக். 778)

  "அமர்வீசு வண்மகிழ் அகுதைப் போற்றிக்
காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்"

(அகம். 113)

  "... ... ... ... ... ... ... ... ... வெல்கொடித்
துனைகா லன்ன புனைதேர்க் கோசர்"

(அகம். 251)

என வருபவற்றால் அறியப்படும்.

     இதனால், கோசர்
  "உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது"

(762)

என்னுங் குறட்கு இலக்கான மூலப்படையைச் சேர்ந்த அல்லது தொல்வரவான பூட்கை மறவரும், படைத்தலைவருமாவர். வேளிர் உழுவித் துண்ணும் வேளாண் வகுப்பைச்சேர்ந்த குறுநில மன்னரும் பண்ணையார் (மிராசுதார்) என்னும் பெருநிலக் கிழாருமாவார்.