பக்கம் எண் :

138தமிழியற் கட்டுரைகள்

      "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" 

(குறள். 1033)

என்று தமிழ்மறை கூறுதல் காண்க.
முதற்றொழிலாளி
     உலகில் முதன் முதல் தோன்றியது உழவுத்தொழிலே. அதனால், பிற தொழிலாளரும் ஒவ்வொரு வகை உழவராகவே கூறப்படுவர்.
     விற் படைஞரை வில்லேருழவர் என்றும், நூற் புலவரைச் சொல்லே ருழவரென்றும், கூறினார் திருவள்ளுவர். களவுத் தொழிலைக் களவேர் வாழ்க்கை என்றார் சீத்தலைச் சாத்தனார். வாள் மறவனை வாளுழவன் என்றது திவாகரம்.
பழுதற்ற தொழிலான்
     உழவுத் தொழிலில் ஒருவகை குற்றமுமில்லை.
  "ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு,"
என்றார் அருந்தமிழ் மூதாட்டியார் ஒளவையார்..
     உண்மை இங்ஙன மிருப்பவும், "உழவுத்தொழிலில் பூச்சி புழுக்களும் செடி கொடிகளும் கொல்லப்படுவதால், அதை இழிந்ததென்று உயர்ந்தோர் கைவிட்டனர்." என்று ஆரியப் போலி அறநூல்கள் கூறும். இதினின்று தமிழ்க் கொள்கைக்கும் ஆரியக் கொள்கைக்குமுரிய ஏற்றத் தாழ்வைக் கண்டு கொள்க.
தலைமைக் குடிவாசி
     மேற்கூறிய இயல்புகளால், உழவனே தலைமைக் குடிவாசி என்பது பெறப்படும். இதை உட்கொண்டே
  "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்(கு)
ஐம்புலத்தா றோம்பல் தலை." 

(குறள். 43)

  "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை."

(குறள். 41)

  "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு."

(குறள். 81)

  "வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்."

(குறள். 85)

என்று குறிப்பாக வேளாளனைப் பாராட்டிக் கூறினர் திருவள்ளுவர்.