பக்கம் எண் :

தலைமைக்குடிமகன்139

      "வேதநூல் முதலாகி
விளங்குகின்ற தலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும்
உழுவார்தந் தலைக்கடைக்கே" 
என்று கம்பர் கூறியதுங் காண்க. (ஏரெழுபது).
     பண்டைநாளில், சிற்றூர் வாணராயினும், பேரூர் வாணராயினும், கொல்லன், தச்சன், கற்றச்சன், கன்னான், தட்டான், கொத்தன், குயவன், வண்ணான், மஞ்சிகன் (நாவிதன்), வாணியன், பாணன், பறையன் முதலிய பதினெண் தொழிலாளரும் குடிமக்கள் எனப்பட்டு, உழவர்க்குப் பக்கத் துணையாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து, கதிரடிக்களத்தில் அவ்வக் காலத்துக் கூலத்தைக் கூலியாகப் பெற்று வாழ்ந்தமை, அக் காலத்துக் கூட்டரவு (சமுதாய) அமைப்பில் உழவரே தலைமையா யிருந்ததை உணர்த்தும்.
  "சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

(குறள். 1031)

என்னும் குறட்கருத்தும் இதனாலேயே விளங்கும்.

     இங்ஙனம் பல்வகையிலும் உழவர் உயர்வுடையவராயிருந்தும், பிறப்போடு தொடர்புற்ற ஆரியக் குலப் பிரிவினையால், தாழ்ந்தவரென்று பிற்காலத்தில் தாழ்த்தப்பட்டனர். இதற்குத் தமிழரே காரணர். தன்னையும் தன்னினத்தையும் தகாதவகையில் தாழ்த்திக் கொண்டவன் தமிழனைத் தவிர வேறொரு நாட்டானும் இவ் விரிந்த வுலகத்தில்லை.
     பாண்டி வேளாளர், நெல்லை வேளாளர், சோழிய வேளாளர், கொங்க வேளாளர், தொண்டை மண்டலந் துளுவ வேளாளர், குடியானவர், உடையார், படையாட்சியர், பள்ளர் எனப் பல குலத்தினர் இற்றைத் தமிழ உழவர். இவருள் தலைமையான நெல்லைச் சைவவேளாளரிடத்தும் பிராமணர் உண்பதில்லை. தமிழருள் தலைமையானவரே தாழ்த்தப்பட்டு விட்டதனால் அந்தண ரரசர் வணிகர் வேளாளரான தமிழரெல்லாரும் சூத்திரர் எனத் தாழ்த்தப்பட்டுவிட்டனர். தாழ்த்தப்பட்டவரென்று பொது வாகக் கூறப்படுவார் ஒடுக்கப்பட்டவரும் பிற தமிழராலும் தீண்டப்படாத வரு மாவர். இவ் விருநிலைமையும் மாறினாலொழியத் தமிழன் முன்னேற முடியாது. ஆரியர் வருமுன் இங்கிருந்த கூட்டரவுநிலை பொருளாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டது. அவர் வந்தபின் ஏற்பட்டது. மதவியலை அடிப்படையாகக் கொண்டது.
     மேலும், உழவர் பெரும்பாலும் கல்லாதவராயிருப்பதால், நாட்டுப் புறத்தானென்றும், பட்டிக்காட்டானென்றும், படியாத முட்டாளென்றும், தற்குறியென்றும், இற்றை யுழவனை இழித்துக் கூறுவதே வழக்கமா யிருக்கின்றது.