பக்கம் எண் :

140தமிழியற் கட்டுரைகள்

     பொங்கல் என்பது, உழவர் பண்டிகை, அறுவடையான பின், புதிரி என்னும் புது நெல்லைச் சமைத்து நன்றியறிவுடன் வழிபடு தெய்வத்திற்குப் படைத்துண்பதே பொங்கல். நீர்வளம் மிகுந்த பாங்கரில் முப்பூ விளையும். (பூவென்பது வெள்ளாமை.) நீர் வளமில்லா இடங்களில் மாரி நீர்த் தேக்கத்தால் ஒரு வெள்ளாமைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி அல்லது தை மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். ஆதலால், தைப் பொங்கல் பெரும் பொங்கல் எனப்பெறும்.
     செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலுந் தவிடு போக்காமல் சரி நீர் வைத்துச் சமைத்து, பருப்புக்குழம்புடன் உண்பது பொங்கல் மரபு. "பருப்புக் கேட்கும் பச்சரிசிச் சோறு, செருப்புக் கேட்கும் சித்திரை மாத வெயில்!" என்பது பழமொழி, பொங்கற் பானையில் உலை பொங்கி வந்தவுடன் சிறிது வழிய விடுவது பொங்கல் அடையாளமாகக் கருதப் பெறும், இதுவே உழுதுண்பார் பொங்கல்.
     அக்காரடலை (சருக்கரைப் பொங்கல்), அக்காரவடிசில் (சருக்கரை நெய்ப்பொங்கல்), நெய்ப்பொங்கல், மிளகுப் பொங்கல், வெண் பொங்கல் முதலிய சுவைமிக்க பொங்கல் வகைகளெல்லாம் உழுவித் துண்பாரும் செல்வருமான பிறர் பொங்கல். பால் பொங்க வைப்பது இடையர் பொங்கல். சல்லிக் கட்டென்றும் மஞ்சு விரட்டென்றும் மாடுவிடுதல் என்றும் நடைபெற்றுவருவது பண்டை முல்லை நில வழக்கம். (ஏறுதழுவல்).
     திணை நிலைக் காலத்தில் உழவர் வழிபட்ட தெய்வம் விண்ணோர் தலைவனான வேந்தன் (இந்திரன்). திணைமயக்கம் ஏற்பட்டபின், பாலை நிலத் தெய்வமான காளியும், நடுகல் தெய்வங்களும் வழிபடு தெய்வங்க ளாயின. சிவநெறியும் திருமால் நெறியுமான பெருமதங்கள் தோன்றியபின், உழுவித்துண்பார் தம் கொள்கைப்படி சிவனையோ திருமாலையோ வழிபட்டுவருகின்றனர்.
     ஆங்கிலக் கல்வியினாலும் நயன்மை (நீதி)க்கட்சி யாட்சியினாலும், தமிழரிடையே மறுமலர்ச்சி யுண்டாயிருப்பதால், பொங்கல் பெருநாள் ஒரு நாட்டினத் திருநாளாகத் தமிழரனைவராலும் ஒருவகைப் புத்துணர்ச்சியுடன் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. பிராமணர் பொங்கலைச் சங்கராந்தி என்பர்.
     பொங்கல் உழவர்க்கே சிறப்பாக வுரிய பெரும் பண்டிகையாயினும், அரசியலாரும் உழவரல்லாத பிற பொது மக்களும் இப் பெருநாளைக் கொண்டாடி உழவரை ஊக்குவதுடன்; நன்றியறிவாகவும் தந்நலங்கருதியும், நிலமுள்ள ஏழையுழவர்க்குக் கடனடைக்கவும், குலவெருதுகள் வாங்கவும் பொருளுதவியும், பொறியியற் கருவிகள், நல்விதைகள், வல்லுரங்கள் முதலியன இலவசமாக வழங்கியும்; நிலமில்லாத வுழவர்க்கு அவற்றோடு நிலமும் வழங்கியும்; பெருநிலக் கிழவரும் சிறுநிலக்கிழவரும் 'நிலமில்லா