பக்கம் எண் :

தலைமைக்குடிமகன்141

வுழவருமாகிய முத்திறத்தார்க்கும் புதிய அறிவியல் முறைகளைக் கற்பித்தும்; உழைப்பினால் பெருவிளைவு காட்டுபவர் பண்ணையாராயின் (மிராசுதார்) பட்டம் சின்னம் சலுகை முதலியவற்றாலும் எளியவராயின் நன்கொடையினாலும், சிறப்பித்தும்; சூத்திரன் என்னும் சிற்றிழிவையும் தீண்டாதான் என்னும் பேரிழிவையும் அடியோ டகற்றியும்; எதிர்கால வுழவராவது தாய்மொழிச் செய்தித்தாளைப் படித்துத் தம் அறிவைப் பெருக்கிக்கொள்ளுமாறு, இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியை விரைந் தேற்படுத்தியும்; உணவுப் பொருள் விளைவுப் பெருக்க இயக்கத்தை ஓங்கச் செய்வாராக.
     "பகடு நடந்த கூழ்" என்று நாலடியார் கூறியபடி, உழவுத் தொழிற் குதவும் எருதுகளையும், பிந்தி யுதவக்கூடிய கன்றுகளையும், பாலுண வளிக்கும் பெற்றங்களையும் (பசுக்களையும்), போதிய ஊட்டங் கொடுத்தும், மிகைவேலை வாங்காதும், நோய் மருத்துவஞ் செய்தும், உடையவர் பேணுமாறு கருத்தாய்க் கவனித்தும்; பேணாதவரைத் தண்டித்தும்; கால்நடைப் பண்ணைகளை ஆங்காங்கு ஏற்படுத்தியும்; அரசியலார் உழவுத் தொழிலை ஊக்குவாராக.
     உழவர் வாழ்க! உழவெருதுகள் வாழ்க!