பக்கம் எண் :

60தமிழியற் கட்டுரைகள்

  "தன்னா சிரியன் தன்னொடு கற்றோன்,
தன்மா ணாக்கன், தகுமுரை காரனென்
றின்னோர் பாயிரம் இயம்புதல் கடனே"

(நன். 51)

என்றார் பவணந்தியார். ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம், நூற்பொருள், நூல் வந்தவழி, நூற்பெயர் முதலியன நூலாசிரியன் கூறுவதே பொருத்த மாதலானும், அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும், அவற்றை நூலாசிரியன் கூறுவது தக்கதென்று கொள்ளப் பட்டுத் தற்சிறப்புப் பாயிரம் எனப் பெயர்பெறும்.
  வணக்கம் அதிகாரம் என்றிரண்டுஞ் சொல்லச்
சிறப்பென்னும் பாயிர மாம்.
தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
எய்த வுரைப்பது தற்சிறப் பாகும்.
 
என்பன காரிகையுரை மேற்கோள். சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்திற்குச் செய்த பாயிரமும், கம்பர் தம் இராமாவதாரத்திற்குச் செய்த பாயிரமும், தற்சிறப்புப் பாயிரத்திற் கெடுத்துக்காட்டாம். இளங்கோவடிகள் மங்கல வாழ்த்துப் பாடலும் அது. மேற்கூறிய இருவகைப் பாயிரத்திற்கும் பொதுவாகவும் சிறப்பாகவும் பல பெயர்கள் உள. அவை,
  முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

(நன்னூல், 1)

என்னும் எட்டாம். இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு.    
1. முகவுரை
     இது நூல் முகத்து உரைக்கப்படுவது; இற்றை வழக்கில் உரைநடையா யிருப்பது; பெரும்பாலும் நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.
2. பதிகம்
     இது நூலாசிரியன் பெயர், நூல்வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது. ஒரு பொருள் பற்றிய பத்து அல்லது பதினோரு பா அல்லது பாவினத் தொகுதி பதிகம் என்று பெயர் பெற்றிருத்தல் காண்க. எடுத்துக்காட்டு : தேவாரப் பதிகம். பதிகம் என்னும் பெயருக்கு ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது என்று பொருள் கூறி,
     அடிக்குறிப்பாக,   
  "பதிகக் கிளவி பலவகைப் பொருளைத்
தொகுதியாகச் சொல்லுதல் தானே"

 

என மேற்கோளுங் காட்டினர். நன்னூலுரையாசிரியர் சடகோப இராமானு சாச்சாரியர். ஐம்பொருள் பொதுப்பாயிரத்திற்கும், பதினொரு பொருள்