பக்கம் எண் :

62தமிழியற் கட்டுரைகள்

6. தந்துரை
     இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர் முன்னுரை (introduction). பெரும்பாலும் தந்துரையாக விருக்கும்.
7. புனைந்துரை
     இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது, திருக்குறட் சிறப்பைப் போப்பையர் முன்னுரை (introduction) எடுத்துக் காட்டுவது போல. புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்.
8. பாயிரம்
     இது முதன் முதல், பொரு களத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது; பின்பு நூன் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது. நெடுமொழி போர் மறவனின் தன் மேம்பாட்டுரை. பாயிரம் என்பது முதற்கண் நெடு மொழியைக் குறித்தமையை,
  "மறு மனத்தா னல்லாத மாநலத்த வேந்தன்
உறு மனத்தானாகி யொழுகின் - செறுமனத்தார்
பாயிரங் கூறிப் படைதொக்கால் என் செய்ப
ஆயிரங் காக்கைக் கோர் கல்."

(பழ. 165)

என்னும் பழமொழிச் செய்யுளான் உணர்க. பாயிரம் என்பதற்கு வீரத்துக்கு வேண்டும் முகவுரைகள். என்று பழையவுரை உரைத்தலையும் நோக்குக.
     பயிர்தல் - அழைத்தல், போருக்கழைத்தல், பயிர் - (பயிரம்) - பாயிரம். சென்னைப் பல்கலைக்கழக அகராதி, பாசுரம் என்பது பாயிரம் என்று திரிந்திருக்கலாம் என்று தன் அறியாமையைக் காட்டுகின்றது. இற்றை நூல் வழக்கை நோக்கின் பாயிரப் பெயர்களுள் புறவுரை, பாயிரம் என்னும் இரண்டும் பொதுவும் சிறப்புமாகிய இருவகைப் பாயிரத்திற்கும் பொதுவாம்; ஏனைய சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாம். சிறப்புப் பாயிரத்திற் குரியவற்றுள் முகவுரை. நூன்முகம், பாயிரம் என்னும் மூன்றும் தற்சிறப்புப் பாயிரத்திற்கும் உரியன. இவற்றுள் நூன்முகம் என்பது தற்சிறப்புப் பாயிரத்திற்குச் சிறப்பென்று கொள்ள இடமுண்டு. தந்துரை என்பது, வழக்கி லில்லாவிடினும், பொதுப் பாயிரத்திற்கும் ஏற்கும்.

     உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக் காலத்தெழுந்த புது வழக்கு. இவற்றுள் முன்னிரண்டும் தற் சிறப்புப் பாயிரத்தையும், பின் மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும், இடையொன்றும் அவ் விரண்டையும் சாரும். சாத்துப்பா என்பது செய்யுள்; ஏனைய உரைநடை. இதுகாறுங் கூறிய பாயிரப் பெயர்களெல்லாம் தூய தென் சொற்களென்று அறிக. முகம் என்பது தென்