பக்கம் எண் :

ஆவுந் தமிழரும்83

பெயராயுமுள்ளது. குதிரை மானைப்போல வேகமாய் ஓடக்கூடியது. வடிவிலும் ஓரளவு அதை ஒத்தது. மா என்பது னகரச் சாரியை பெற்று மானையுங் குதிரையையுங் குறிப்பதுடன் விலங்குப் பொதுப்பெயராயு மிருக்கும். கடமா (கடம்+மா) என்பது காட்டாவிற்கும் காட்டெருமைக்கும் பெயர். இதனால், ஆ என்னும் பெயருக்கும் மா என்னும் பெயருக்கும் ஓர் இயைபிருப்பதை உணரலாம். இவ்விரண்டும் னகரச் சாரியை பெறுவதும் இங்கு நோக்கத்தக்கது.
     மா என்னும் பெயரே ஆ என்று திரிந்திருக்கலாம். மாஅஅ என்று முக்காரமிடும் மாடு மாவெனப்பட்டது. மா-ஆ; மான்-ஆன் மா - மான் -மாடு.ஒ.நோ : கா-கான்-காடு. ஆ-அவன்-வாடு (தெ.) ஆ என்பது முதலில் மாடு என்று பொருட்பட்டுப் பின்பு பசுவிற்கு வரையறுக்கப்பட்டது.
     பண்டையுலகம் முழுமையும் மாடே, மக்கள் செல்வமாயிருந்தது; அதனால் செல்வம் மாடெனப்பட்டது.
     "கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை"

(குறள். 400)

     E. pecuniary = relating to money; & pecunia = money pecudes(pl.) = cattle.
     மக்களுக்கு முல்லை நிலத்திலேயே உழவு தோன்றிற்று; அது மருத நிலத்தில் சிறப்படைந்தது. முன்னதில் புன்செய்ப் பயிரும் பின்னதில் நன்செய்ப் பயிரும் விளைவிக்கப்பட்டன. மாடு இருநிலத்தார்க்கும் ஊனும் பாலும் உதவியதுடன், இருவகை வேளாண்மைக்கும் உழுதிறைத் துதவியது.
     "பகடு நடந்த கூழ்"
என்றார் நாலடியார்.
     மாட்டின் ஊனும் பாலும் மட்டுமல்ல; தோல், கொம்பு, உரசனை (ரோசனை), வால் மயிர், சாணம் முதலிய பிறவும் பயன்பட்டன. வீட்டைத் துப்புரவு செய்யவும் அடுப்பெரிக்கவும் பயிருக் குரமிடவும் சாணம் உதவுவது. சிறந்த உணவும் மருந்துமாகிய தயிரும் மோரும் வெண்ணெயும் நெய்யும் பாலிலிருந் தெடுக்கப்படுவன. இங்ஙனம், உணவை விளைவிப்பதும் தானும் உணவளிப்பதும் வேறு பல்வகை யுதவுவதுமாகிய மாட்டினத்தைச் செல்வமாக மட்டுமின்றி மக்கள் போலுங் கருதிவந்தனர் முன்னைத்தமிழர். (பால் முதல் நெய்யீறாக வுள்ள ஐந்தும் ஐயமுதம் (பஞ்சாமிர்தம்) எனப்படும். இவற்றுள் இரண்டை விலக்கி அவற்றிடத்தில் ஆநீர் ஆப்பி என்பவற்றைக் கூறுவது, தமிழர் கொள்கையறியாத புராணிகர் கூற்று என்பர் துடிசைகிழார் அ. சிதம்பரனார்.)