கோ என்னுங் குறைச்சொல் அரசனையுந் தந்தையையுங் குறிக்கும். "நின்கோ வரினு மிங்கே" (கலி.116) என்னுமிடத்தில் தந்தையைக் குறித்தது. | இனி ஆனிலை யுலகம் என்று மேலுலகத்தின் ஒரு பகுதி பெயர் பெற்றது. காமதேனு என்னும் கற்பித ஆபற்றியோ, கண்ணன்பற்றியோ, வேறு காரணம்பற்றியோ, அறிகிலம். | இதுகாறுங் கூறியவற்றால், தமிழர்க்கு ஆவொடு தொன்றுதொட்ட தொடர்புண்டென்றும், ஆவென்னும் பெயர் போன்றே கோ வென்னும் பெயரும் தனித்தமிழ்ச் சொல்லென்றும், வடமொழியி லிருப்பவையெல்லாம் வடசொ லல்லவென்றும், ஆரியஞ் சென்று வழங்கும் தமிழ்ச்சொல் பலப்பல வென்றும், ஆவின் அருமை பெருமையைத் தமிழர் செவ்வனே யறிந்து அதற்குத் தக அதனைப் போற்றிவந்தன ரென்றும், மக்கள் ஆக்களாகவும் அரசனும் கடவுளும் ஆயராகவுங் கருதப்பட்டன ரென்றும், இக் கருத்தே உயிர்கள் ஆன்மாவென்று தென்மொழியிலும் பசுவென்று வடமொழியிலுங் குறிக்கப்பெற்றமைக்குக் காரணமென்றும் தெரிந்து கொள்க. | குறிப்பு : அந்தணர் என்னும் சொல் முதன்முதல் தமிழ் முனிவரையே குறித்தது. பின்பு அது முறையே முனிவர் நிலையடைந்த ஆரியரையும், அடியாராயிருந்த அல்லது மறைத் தொழில்புரிந்த பிராமணரையும் இறுதியில் எல்லாப் பிராமணரையும், படிப்படியாய்த் தழுவலாயிற்று. 'ஆவொடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே' என்பது பிற்காலக் கருத்து. | - காஞ்சி நாகலிங்க முனிவர் முத்துவிழா மலர் | | |
|
|