பக்கம் எண் :

கற்புடை மனைவியின் கண்ணியம்89

     "அந்தரத் தெழுதிய எழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்"

(கற்பியல், 5)

என்னுந் தொல்காப்பிய அடிகளால் உணரலாம்.
     மேற்கூறிய இருபாற் குணங்களுடன் இரண்டொன்று கூட்டி, அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்னும் நான்கும் ஆண்பாற் குணமென்றும், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நான்கும் பெண்பாற் குணமென்றுங் கூறினர் பின்னோர்.
     "அறிவொடு நிறையே யோர்ப்புக்
கடைப்பிடி குணநான் காமே"

(கற்பியல், 5)

     "நாணமே மடமே யச்ச நாட்டிய
பயிர்ப்பு நான்கும்
மாணிழை மடநல்லார்க்கு வைத்த
நாற்குணங்களாகும்"

(சூடாமணி நிகண்டு, 12: 16, 17)

     அவ்வையும் காக்கைபாடினியும்போலும் புலவியரும், தடாதகையும் மங்கையும்போலும் அரசியரும், கண்ணகியும் திலகவதியும்போலும் கற்புடையாரும், கவுந்தியும் மணிமேகலையும்போலும் துறவியரும் இந் நாட்டிலும் இருந்திருக்க, அறிவு முதலிய நாற்குணங்களை ஆண்பாற்கே சிறப்பாகக் கூறியது, நந்நாட்டுப் பெண்டிர்க்கு இற்செறிப்பு காரணமாக அறிவுக் குறையும் பெண்டிர்க்கெல்லாம் இயல்பாகவுள்ள மென்மையும் பற்றியேயாம். இற்செறிப்பு பெண்டிரின் ஒழுக்கக்காப்பும் உயிர்க்காப்பும் நோக்கியது. பெரும்பாலும் வெளியேறாது வீட்டுக்குள்ளேயேயிருப் பவர்க்கு, அல்லது, அயலிடஞ் செல்லாது உள்ளூரிலேயே வதிபவர்க்கு அறிவு மட்டாயிருத்தல் மிகுதி. நம்நாட்டிற் பெண்டிர் சிற்றிளம் பருவத்தி லேயே இல்லறத்திற் புகுத்தப்பட்டு வந்தமையின், அவர்க்கு உயர்தரக் கல்விக்குப் போதிய வாய்ப்பு மிருந்ததில்லை. இதனால், ஒப்புநோக்கிய முறையில், பெரும்பான்மைபற்றி, மடத்தைப் பெண்பாற் குரித்தாக்கிப் பேதை மடந்தை மடவரல் முதலிய பெயர்களை வழங்கினர். பொதுவாகப் பெண்டிர்க்குப் பூப்படைந்தவுடன் மண நிகழ்ந்தமையின் பெரும்பாலும் பதினெட்டு அல்லது இருபதாண்டிற்கு மேற்பட்ட கணவன், தன் இளமனைவியைப் பேதை அல்லது மடந்தை யென்றதனாற் குற்றமில்லை. அது, "அஞ்சன் மடவனமே" என்றாற்போல இளமை நோக்கிய அருமை விளியேயன்றி, அறியாமை நோக்கிய இழிப்பு விளியன்று. மேலும், நம்நாட்டில் ஆடவரின் மணப்பருவத்திற்கு வரையே யில்லை; மணத் தொகைக்கும் எல்லையில்லை. பெண்டிர்க்கோ கைம்பெண்ணாயின் மறுமணமில்லை யென்றும், வாழ்நாள் முழுதும் ஒருவனையே மணக்க வேண்டும் என்றும் வரம்புளது. இதனால் கணவனின் மூப்பும் மனைவியின் சிற்றிளமையும் பெருவழக்காம். மடம் என்னுஞ் சொல்லுக்கு இளமை